search icon
என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
    • எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

    நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் "அமரன்." தீபாவளி பண்டிகையன்று வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலையும் வாரி குவிக்கிறது.

    இந்தப் படத்திற்கு ரசிகர்கள், பொது மக்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில், அமரன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி கோயம்புத்தூரில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அமரன் திரைப்படம் சிறுபான்மையினரை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. திரையரங்கம் முன்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.

    போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அமரன் படத்தை தடை செய்யக்கோரி போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மு.க.ஸ்டாலினின் அளவற்ற அன்பிற்கு நான் எந்நாளும் கடமைப்பட்டுள்ளேன்.
    • கோவை மாவட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபடுவேன்.

    கோவை:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.

    முதல் நாள் நிகழ்ச்சியில் விளாங்குறிச்சியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைத்ததுடன், வீட்டு வசதி வாரியம் சார்பில் நிலம் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு நில விடுவிப்பு ஆணைகளை வழங்கினார்.

    நேற்று 2-வது நாளாக கள ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை காந்திபுரம் அடுத்த அனுப்பர் பாளையத்தில் சிறைச்சாலைக்கு சொந்தமான 6.98 ஏக்கர் நிலத்தில் ரூ.300 கோடி மதிப்பில் அமைய தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    இந்த விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜியை வெகுவாக பாராட்டி பேசினார்.

    செந்தில் பாலாஜி கோவையின் பொறுப்பு அமைச்சராக இருந்து அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தீவிர களப்பணியாற்றி வந்தார். அவருக்கு இடையில் சில தடைகள் வந்தன.

    அந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து தற்போது மீண்டும் கோவைக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார்.

    மீண்டும் அதே உத்வேகத்துடன் கோவை மாவட்டத்தில் அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தீவிர களப்பணியாற்றுவார். அது உறுதி உறுதி என தெரிவித்து, அமைச்சர் செந்தில்பாலாஜியை பாராட்டி தள்ளினார்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை பாராட்டியதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

    தடைகள் வந்தபோதெல்லாம் தாயுமானவராய் இருந்து என்னை தாங்கிய தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலினின் இந்த அளவற்ற அன்பிற்கு நான் எந்நாளும் கடமைப்பட்டுள்ளேன்.

    முதல்-அமைச்சர் ஆணைக்கு இணங்க களப்பணியாற்றி நலத்திட்ட பணிகளை வேகப்படுத்தி கோவை மாவட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபடுவேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். அத்துடன் முதலமைச்சர் தன்னை பாராட்டிய பேசிய அந்த வீடியோவையும் அந்த பதிவுக்கு கீழே பகிர்ந்துள்ளார்.

    • கோவையில் அமையவுள்ள பெரியார் நூலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
    • அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே - அஜித்தே" என்று கூறி வருகின்றனர்.

    கோவை மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடியில் மாபெரும் நூலகத்திற்கும், அறிவியல் மையத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    கோவையில் பெரியார் பெயரில் அமையவுள்ள நூலகம் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பில் கட்டப்படவுள்ளது என்றும் 2026ம் ஆண்டு திறக்கப்படும் என்று

    அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியின் போது கூடியிருந்த கல்லூரி மாணவர்கள் "கடவுளே அஜித்தே" என கூச்சலிட்டுள்ளனர். மாணவர்கள் கூச்சலிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    சமீப காலங்களில் அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே - அஜித்தே" என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2021 ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கு பயணித்து நலத்திட்ட உதவிகளை வழங்கும் திட்டத்தை நடத்தியுள்ளேன்.
    • கோவை மாவட்டத்திற்கு அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த கம்பேக் கொடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

    கோவை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று கோவை சென்றார். கோவையில் பொதுமக்களை நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

    அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள் முறையாக மக்களை சென்றடைகிறதா? என்பதை ஆய்வு செய்து அதிகாரிகளுடனும் ஆலோ சனை நடத்தினார்.

    நேற்றைய நிகழ்ச்சிகள் முடிந்ததும் இரவு கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கினார்.

    இன்று 2-வது நாளாக அவர் தனது கள ஆய்வை தொடர்ந்தார். காந்திபுரம் மத்திய ஜெயில் அருகே உள்ள மைதானத்தில் செம்மொழி பூங்கா கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்த பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பணிகள் எந்தளவு முடிந்துள்ளது. இன்னும் என்னென்ன பணிகள் எஞ்சியுள்ளன என கேட்டறிந்தார். பணிகளை விரைந்து முடிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து கோவை காந்திபுரம் திறந்த வெளி சிறைச்சா லையின் ஒரு பகுதியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் மிகப்பெரிய நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடந்தது.

    இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அடிக்கல் நாட்டி நூலகம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். விழாவில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கோவையில் அமைய உள்ள நூலகத்துக்கு தந்தை பெரியார் பெயர் சூட்டப்படுவதாக அறிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    கோவையில் இங்கு குழுமியுள்ள மாணவ செல்வங்களை சந்திக்கும்போது எனக்கு ஒரு புதிய உணர்ச்சியை, ஆற்றலை ஏற்படுத்தி உள்ளது. சில மாதத்துக்கு முன்பு தமிழ்புதல்வன் திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தேன். இன்று நூலக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றதில் மகிழ்சசி பெருமையடைகிறேன்.

    2021 ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கு பயணித்து நலத்திட்ட உதவிகளை வழங்கும் திட்டத்தை நடத்தியுள்ளேன். கோவைக்கு 3 முறை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். அப்போது மாவட்டத்திற்கான திட்டங்களை தொடங்கியும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளேன். புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளேன்.

    2023 தொடக்கத்தில் அந்த திட்டங்கள் நிலை குறித்து மண்டல வாரியாக ஆய்வு கூட்டங்களையும் நடத்தி உள்ளேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் பாராளுமன்ற தேர்தல் வந்தது. தேர்தல் முடிந்ததும் அமைச்சரவை கூட்டம் நடத்தி கடந்த 3 ஆண்டுகளில் நாம் அறிவித்த திட்டங்களின் நிலை குறித்து அமைச்சர்கள் துறை ரீதியாக ஆய்வு செய்ய சொன்னேன். நான் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க பயணம் சென்றேன். அதை முடித்து அமைச்சர்களை சந்தித்து துறை ரீதியான ஆய்வுகளை கோட்டையில் நடத்தி கொண்டிருந்தேன்.

    மாவட்டங்கள் வாரியாக நான் நேரடியாக ஆய்வு செய்யலாம் என்று சொல்லி நான் தொடங்கிய பயணத்தில் முதல் மாவட்டமாக தேர்ந்தெடுத்தது இந்த கோவை மாவட்டத்தை தான். நேற்று காலை இங்கு வந்ததில் இருந்து பல்வேறு பணிகளை ஆய்வு செய்துள்ளேன். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். மாவட்டம் முழுவதும் மக்களுக்கு தேவையான கோரிக்கைகளையும் கேட்டுள்ளேன். அதில் ஒரு கட்டமாக மாபெரும் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.

    கோவை மாவட்டத்திற்கு அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த கம்பேக் கொடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அவரது சிறப்பான வேகமான செயல்பாட்டை பார்த்து, நடுவில் சில தடைகளை ஏற்படுத்தினார்கள். அந்த தடைகளை உடைத்து மீண்டும் வந்திருக்கிறார். கோவைக்காக சிறப்பாக செயல்பட வந்திருக்கிறார். அது உறுதி.

    கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தினோம். அதன் நினைவாக தான் மதுரையில் மாபெரும் நூலகத்தை அமைத்தோம். பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். அதேபோன்று கோவையிலும் கலைஞர் பெயரிலும் அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்தது. கோவையில் நூலகம் அமைக்கப்படும் என அறிவித்தேன். அடுத்த ஆலோசனையில் அறிவியல் மையமும் அமைக்கலாம் கருத்துக்கள் வந்தது.

    அது வந்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது தந்தை பெரியார். சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இருக்கு. அதனால் கோவையில் அவர்கள் 2 பேரையும் உருவாக்கிய தந்தை பெரியார் பெயரில் நூலகம், அறிவியல் மையம் அமைவது தான் பொருத்தமாக இருக்கும்.

    தொண்டு செய்து பழுத்த பழம் தான் தந்தை பெரியார். 80 ஆண்டுகளுக்கு முன்பே வரும் உலகம் எப்படி இருக்கும் என கனவு கண்ட பகுத்தறிவு ஆசான். இந்த இளைய சமுதாயம் வாழ தந்தை பெரியார் நூலகமும், அறிவியல் மையமும் கோவையில் கம்பீரமாக மிக சிறப்பாக அமைய உள்ளதை மகிழ்ச்சியாக தெரிவிக்கிறேன்.

    அடிக்கல்நாட்டு விழாவில் இந்த நூலகத்தின் திறப்பு விழா தேதியையும் அறிவிக்கிறேன். 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தநூலகம் திறக்கப்படும். திராவிட மாடல் அரசு சொன்னதை செய்யும். கோவையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைத்தேன்.

    கோவையின் அடையாளமாக மாற உள்ள செம்மொழி பூங்கா பணிகளையும் பார்வையிட்டுள்ளேன். ரூ.133 கோடி மதிப்பில் நடக்கும் அந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு ஜூன் மாதம் அது திறக்கப்பட உள்ளது.

    தி.மு.க ஆட்சியில் திட்டத்தை அறிவித்தால் அதனை குறிப்பிட்ட காலத்திற்கு திறந்து வைப்போம். உயர்தர சிறப்பு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம், வரலாற்றை எடுத்துக்காட்டும் கீழடி அருங்காட்சியகம். அந்த வரிசையில் இந்த பெரியார் நூலகம் இடம் பெற போகிறது.

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கப்படட நில உரிமையாளர்களுக்கு விடுவிப்பு ஆணைகளை வழங்கினேன். இது 35 ஆண்டு கால பிரச்சனை. பாராளுமன்ற தேர்தலுக்கு பிரசாரத்துக்கு வந்தபோது என்னிடம் மனு கொடுத்தனர். நான் அமைச்சர் முத்துசாமியிடம் கொடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என சொன்னேன். நேற்று மட்டும் 10 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் அந்த ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஊருக்கும், மக்களுக்கும் தேவையான திட்டங்கள் என்ன. வட்டார மக்களின் எதிர்பார்ப்பு என்ன என அறிந்து அந்த திட்டங்களை செயல்படுத்துகிறோம். என்னை பொறுத்தவரை ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் ஒவ்வொரு நாளையும் மக்களுக்கு நன்மை செய்யும் நாளாக பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு தனி மனித கவலையையும் போக்கும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்களால் மக்களுக்கு நன்மை செய்கிறோம்.

    மக்களின் வாழ்க்கையோடு, திராவிட மாடல் அரசு இரண்டற கலந்துள்ளது. வாக்களித்தவர்கள், வாக்களிக்க மறந்தவர்கள், வாக்களிக்க மனமில்லாதவர்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து மக்களுக்குமான அரசாக நாம் செயல்பட்டு வருகிறோம். அதனால் தான் மக்கள் நம்மை தொடர்ந்து ஆதரிக்கின்றனர். இன்னும் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலை விட நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இது தான் நம்மை பலரும் விமர்சிக்க காரணம். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் மக்களுக்கான எங்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருப்போம்.

    இன்றைக்கும் நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிட முன்னேற்ற கழக ஆட்சி. எங்களுக்கு ஒரு மிஷன் இருக்கும். அதனை செயல்படுத்துவதற்காக மிஷன் தான் ஆட்சி அதிகாரம். 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வடமாநிலமும், தமிழ்நாடும் எப்படி இருந்தது என்று பாருங்கள். இப்போது அதே வடமாநிலத்தோடு, தமிழ்நாட்டை ஒப்பிட்டு பாருங்கள். அது உங்களுக்கே புரியும்.

    தமிழ்நாடு இந்தியாவிலேயே 2-வது பொருளாதார மாநிலம். அதிக நகரமயமான மாநிலம். ஐ.நாவின் வளர்ச்சி இலக்கை செயல்படுத்துவதில் முதல் மாநிலம். இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு தமிழகத்தில் தான் உள்ளது. தொழிற்சாலைகள் குறியீட்டில் 48 விழுக்காடு மேற்கொண்டது தமிழ்நாடு தான். தெற்காசியாவில் சுற்றுலாவில் முதல் மாநிலம் தமிழ்நாடு.

    வறுமையின்மை, பட்டினி விழிப்பு, தரமான கல்வி, பாலின சமத்துவம், குடிநீர், வேலை வாய்ப்பு, குறைந்த விலைவாசி, பொருளாதார குறியீடு, தொழில், அமைதி, உற்பத்தி என எந்த புள்ளி விவரத்தை எடுத்தாலும் தமிழகம் தான் முன்னணி மாநிலமாக இருக்கும்.

    இதுசாதாரணமாக நடக்கவில்லை. கொள்கையும், லட்சியமும் கொண்டு அதை அடைவதற்கான தொலைநோக்கு பார்வை, செயல்திட்டங்கள் கொண்ட மக்களுக்கான அரசை நடத்துவதால் இது சாத்தியமாயிற்று. இதை இன்னும் எளிதில் சொல்ல வேண்டும் என்றால், இந்த இயக்கத்தை தொடங்கும்போது பேரறிஞர் அண்ணா வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்றார். ஆனால் இன்றைக்கு நாங்கள் தெற்கை வளர்த்திருக்கிறோம். இன்னும் ஒருபடி மேலே போய் சொல்ல வேண்டும் என்றால் வடக்கிற்கும் தெற்கு தான் வாரி வழங்குகிறது. அது தான் உண்மை நிலை. அதை யாரும் மறுக்க முடியாது. என்னை பொறுத்த வரை கோட்டையில் இருந்து பணியாற்றுவது இல்லாமல் களத்தில் பணியாற்றுபவன் இந்த ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

    வரலாற்றில் நிலைத்து இருக்க கூடிய திட்டங்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் திட்டங்களை செயல்படுத்தியவன் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். உங்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையும், பணியும் ஏராளம் இருக்கிறது. உங்களது ஆதரவு எங்களுக்கு வேண்டும். அது எங்களை வேலை செய்ய தூண்டும். ஆகவே உங்களுக்காக உங்களில் ஒருவனாக நான் இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து காந்திபுரத்துக்கு காரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சரும் பதிலுக்கு மக்களை பார்த்து கைகூப்பி வணங்கியும், கைகளை அசைத்தபடியும் சென்றார்.

    விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ. வேலு, முத்துசாமி, செந்தில்பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மு.பெ. சாமிநாதன், கயல் விழி செல்வராஜ், தலைமை செயலாளர் முருகானந்தம், கணபதி ராஜ்குமார் எம்.பி., கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், மேயர் ரங்கநாயகி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • முதல்வர் கோயம்புத்தூருக்கு வருவது மூலமாக நிறைய திட்டங்கள் கிடைத்துள்ளது.
    • ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் நான் கலந்துகொண்டேன்.

    கோவை மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடியில் மாபெரும் நூலகத்திற்கும், அறிவியல் மையத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

    இதைத்தொடர்ந்து அவர் முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்து உரையாற்றினார்.

    இதுதொடர்பாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    கோயம்புத்தூரில் எனது தொகுதி தொடர்பாகவும், கோயம்புத்தூர் மெட்ரோ, விஷ்வ கர்மா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். முதல்வர் பரிசீலிப்பதாய் தெரிவித்துள்ளார்.

    முதல்வர் கோயம்புத்தூருக்கு வருவது மூலமாக நிறைய திட்டங்கள் கிடைத்துள்ளது. சாலைகள் எல்லாம் கிடைக்கிறது என்று நன்றி தெரிவித்தேன். திரும்பவும் கோவைக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

     

    இது திமுக கட்சி நிகழ்ச்சி அல்ல. இது அரசாங்கத்தின் நிகழ்ச்சி. அதுமட்டுமல்ல இது எனது தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சி. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் நான் கலந்துகொண்டேன்.

    என்னை பொறுத்தவரை தொகுதி மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். அவர்களுக்கான சில கோரிக்கைகளை நான் நிறைவேற்ற வேண்டி உள்ளது.

    எதிர்க்கட்சி என்றாலும் அவர்கள் ஆளும் அரசாங்கத்தில் இருக்கின்றபோது அந்த விதத்தில் தான் அணுகுகிறேனே தவிர கட்சி ரீதியாக பார்க்கவில்லை என்று கூறினார்.

    • Leopard movement is currently increasing in residential areas, குடியிருப்பு பகுதிகளில் தற்போது சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
    • தொடர்ந்து 2 சிறுத்தைகளும் தங்களுக்குள் செல்ல சண்டை போட்டு விளையாடின.

    வால்பாறை:

    வால்பாறை பகுதியில் பொதுவாக பனிக்காலம் தொடங்கும் நிலையில் அங்கு சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். மேலும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வரும் சிறுத்தைகள் அங்குள்ள வீடுகளில் வளர்க்கப்படும் நாய், கோழி, ஆடு போன்றவைகளை வேட்டையாடி தின்றுவிட்டு தப்பி செல்வது வழக்கம்.

    வால்பாறை கூட்டுறவு காலனி, துளசிங்க நகர், காமராஜர் நகர், அண்ணா நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் தற்போது சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய 2 சிறுத்தைகள் தேயிலைத்தோட்டத்தில் இருந்து குடியிருப்புக்குள் நுழைந்தன. பின்னர் அங்குள்ள சாலையில் சிறிது நேரம் படுத்து ஓய்வெடுத்தன. தொடர்ந்து 2 சிறுத்தைகளும் தங்களுக்குள் செல்ல சண்டை போட்டு விளையாடின. பின்னர் அவை மீண்டும் குடியிருப்பில் இருந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன.

    இந்த காட்சிகள் அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • சின்னியம்பாளையம் - நீலாம்பூர் வரை உயர்மட்ட சாலை நீட்டிக்கப்படும்.
    • மனித - விலங்கு மோதல் தடுக்க ரூ.7 கோடி மதிப்பில் யானைகள் உள்ளே வராத அளவிற்கு வேலி அமைக்கப்படும்.

    கோவை மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடியில் மாபெரும் நூலகத்திற்கும், அறிவியல் மையத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் கூறியதாவது:

    * தங்க நகை வியாபாரிகள் பல கோரிக்கைகளை வைத்துள்ளனர். ரூ.126 கோடி செலவில் தங்க நகை உற்பத்திக்கு தொழில் வளாகம் அமைக்கப்படும். ஏராளமானோர் இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

    * கோவைக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது திமுக அரசு.

    * கோவை கிரிக்கெட் மைதானம் அமைக்க விரைவில் பணிகள் தொடங்கும்.

    * கோவையில் புதிய தகவல் தொழில் நுட்ப மையம் அமைக்கப்படும். கோவை வளர்ச்சியில் புதிய மைல் கல்லாக தகவல் தொழில்நுட்ப மையம் அமையும்.

    * சின்னியம்பாளையம் - நீலாம்பூர் வரை உயர்மட்ட சாலை நீட்டிக்கப்படும்.

    * ரூ.26 கோடி செலவில் கூட்டுக்குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும்.

    * ரூ.200 கோடி செலவில் மண் சாலைகள் தார் சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.

    * மனித - விலங்கு மோதல் தடுக்க ரூ.7 கோடி மதிப்பில் யானைகள் உள்ளே வராத அளவிற்கு வேலி அமைக்கப்படும்.

    * நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக அரசு.

    * நாட்டின் 2வது பொருளாதார மாநிலம் தமிழ்நாடு. பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

    * வட மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி தெரியும் என்று கூறினார்.

    • கோவை நூலகம் கம்பீரமாக மிகச்சிறப்பாக அமையும்.
    • கோவைக்கு அரசு திட்டங்களை செயல்படுத்த கம்பேக் கொடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி.

    கோவை மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடியில் மாபெரும் நூலகத்திற்கும், அறிவியல் மையத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் கூறியதாவது:

    * கோவையில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பில் நூலகம் அமைய உள்ளது.

    * கோவை நூலகம் கம்பீரமாக மிகச்சிறப்பாக அமையும்.

    * மதுரை நூலகத்தை பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.

    * கோவை நூலகம் 2026ம் ஆண்டு திறக்கப்படும்.

    * கோவையில் பெரியார் பெயரில் நூலகம் அமைவது தான் பொருத்தமாக இருக்கும்.

    * மாணவர் சமுதாயத்தை பார்க்கும்போது ஆற்றல் ஏற்படுகிறது.

    * கோவை மாவட்டத்தில் 3 முறை நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன்.

    * கோவைக்கு அரசு திட்டங்களை செயல்படுத்த கம்பேக் கொடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி. கோவைக்கு சிறப்பான திட்டங்களை செய்ய உள்ளார்.

    * தடைகளை உடைத்து மீண்டு வந்திருக்கிறார் செந்தில் பாலாஜி என்று கூறினார்.

    • போத்தனூரில் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.
    • மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை மக்களின் வரவேற்பின் மூலம் தெரிந்து கொண்டேன் என்றார்.

    கோவை.

    2 நாள் பயணமாக கோவை வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க.,வினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விளாங்குறிச்சியில், எல்காட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டடத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் சுகுணா கல்யாண மண்டபத்தில் நில எடுப்பு விலக்கு அளிக்கப்பட்ட உத்தரவுகளை உரிமையாளர்களுக்கு வழங்கினார்.

    தொடர்ந்து குறிச்சி தொழிற்பேட்டை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர்கள் விடுதியினை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து போத்தனூரில் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.


    நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

    மக்கள் பல கோரிக்கைகள் வைத்திருக்கின்றனர். அவை நிறைவேற்றித் தரப்படும். தங்க நகை தொழில் பூங்கா கோரிக்கை பரிசீலிக்கப்படும். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சிதான். மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை மக்களின் வரவேற்பின் மூலம் தெரிந்து கொண்டேன் என்றார்.

    முன்னதாக, எந்த எதிர்பார்ப்புமின்றி கழகத்திற்காக உழைக்கும் தொண்டர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக பத்து அல்லது பதினைந்து இளைஞர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை என்று கோவையில் கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தனது முதல் கள ஆய்வினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் தொடங்கினார்.
    • கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

    கோவை:

    தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கிறதா? அரசின் வளர்ச்சி பணிகள் சரியாக நடக்கின்றனவா? என்பதை மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து, நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொள்ள போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    அதன்படி தனது முதல் கள ஆய்வினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் தொடங்கினார்.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அங்கு அவருக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வரவேற்பை ஏற்றுக்கொண்ட அவர் அங்கிருந்து காரில் விளாங்குறிச்சிக்கு சென்றார்.

    அங்குள்ள தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் எல்காட் நிறுவனம் சார்பில் 3.94 ஏக்கர் பரப்பளவில், ரூ.114.16 கோடியில் 8 தளங்களுடன் புதிதாக தகவல் தொழில்நுட்ப கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அந்த கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

     

    இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, செந்தில்பாலாஜி, பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் தலைமை செயலாளர் முருகானந்தம், கோவை தொகுதி எம்.பி. கணபதி ராஜ்குமார், கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், மேயர் ரங்கநாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீளமேடு பகுதியில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்திற்கு சென்று, அங்கு கள ஆய்வின் ஒரு பகுதியாக, வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு நிலவிடுப்பு உத்தரவு ஆணையை வழங்குகிறார்.

     

    • நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள், ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.
    • மாலை வெகுநேரமாகியும் 2 பேரின் நடமாட்டமும் வெளியில் தெரியவில்லை.

    கோவை:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த பூலாவூரணியை சேர்ந்தவர் பழனிச்சாமி(வயது39). இவர் வீட்டில் வைத்து மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்தார்.

    இவரது மனைவி வத்சலா(35). இவர்களுக்கு 7 வயதில் மகன் இருந்தார். வத்சலா அங்குள்ள தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பழனிச்சாமியின் மகன் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார்.

    மகன் இறந்த நாளில் இருந்து பழனிச்சாமியும், அவரது மனைவி வத்சலாவும் மிகுந்த மன வேதனையில் காணப்பட்டனர். அவர்களுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி அவர்களை சமாதானப்படுத்தி வந்தனர். ஆனாலும் மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் இருவரும் தவித்தனர்.

    இதையடுத்து உறவினர்கள் 2 பேரையும், கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று சில காலம் தங்கி வாருங்கள் என கூறி அனுப்பி வைத்தனர். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 பேரும் கோவைக்கு வந்தனர்.

    சிறிது நாட்கள் 2 பேரும் தங்களது உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர். பின்னர் வேடப்பட்டி வி.கே.வி. ஸ்ரீநகர் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினர். வத்சலா வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வந்தார்.

    இங்கு வந்த பின்னரும் அவர்களுக்கு மகன் நினைவாகவே இருந்தது. மகன் தங்களை விட்டு போய்விட்டானே என நினைத்து நினைத்து வருத்தப்பட்டு கொண்டே இருந்தனர். ஒருகட்டத்தில் அவர்களும், தங்கள் மகன் சென்ற இடத்திற்கே சென்று விட முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள், நேராக காந்திபுரம் காட்டூர் பகுதிக்கு வந்தனர். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து 2 பேரும் தங்கினர்.

    நேற்று மாலை வெகுநேரமாகியும் 2 பேரின் நடமாட்டமும் வெளியில் தெரியவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர் ஒருவர் அறைக்கு சென்றார். அறை கதவை தட்டியபோது, கதவு பூட்டப்படாமல் திறந்து கொண்டது. அப்போது அங்குள்ள அறையில் கணவன், மனைவி 2 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அந்த ஊழியர் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அங்கிருந்த மற்றவர்களும் ஓடி வந்து பார்த்தனர். சம்பவம் குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர்கள் எப்படி இறந்தனர் என்பதை அறிய போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது அங்கு 2 குளிர்பான பாட்டில்கள் கிடந்தன. அதனை பறிமுதல் செய்தனர்.

    அவர்கள் மகன் இறந்த துக்கத்தில் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

    அத்துடன் அவர்கள் பிணமாக கிடந்த இடத்தின் அருகே ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

    அந்த கடிதத்தில், எங்களது இறப்புக்கு யாரும் காரணமில்லை. எங்களது மகன் இறந்த அதிர்ச்சியில் இருந்து எங்களால் மீளமுடியவில்லை. இதனால் நாங்களும் எங்கள் மகன் சென்ற இடத்திற்கே செல்கிறோம் என எழுதப்பட்டிருந்தது.

    இதுகுறித்து பழனிச்சாமியின் சகோதரர் முருகேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளார்.
    • கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

    கோவை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா? என்பதை மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளார்.

    கள ஆய்வுப்பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை (5-ந்தேதி) கோவையில் இருந்து தொடங்க உள்ளார். நாளையும், நாளை மறுநாளும் கோவையில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆய்வு செய்கிறார்.

    இதற்காக நாளை காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    காலை 11.30 மணிக்கு விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனம் சார்பில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 3.94 ஏக்கர் பரப்பளில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழிநுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

    மதியம் 12 மணிக்கு சுகுணா திருமண மண்டபத்தில் கள ஆய்வுப்பணியின் ஒரு அங்கமாக முதல்-அமைச்சர் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு விடுப்பு ஆணைகளை வழங்க உள்ளார்.

    மாலை 4 மணிக்கு சிவாலயா திருமண மண்டபத்தில் தங்க நகை தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். தங்க நகை தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறித்து அவர் கேட்டறிகிறார்.

    தொடர்ந்து போத்தனூர் பிவிஜி திருமண மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடி 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து அவர் ஆலோசனை வழங்குகிறார். பின்னர் இரவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    மறுநாள் (6-ந் தேதி) காலை 9.30 மணிக்கு கோவை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்று வரும் செம்மொழி பூங்கா கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

    தொடர்ந்து திறந்தவெளி சிறைச்சாலையின் ஒரு பகுதியில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அவர் மதியம் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி கோவை மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். மு.க.ஸ்டாலின் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

    கலைஞர் நூலக அடிக்கல் நாட்டு விழாவில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    முதலமைச்சர் வருகையை யொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. உள்ளூர் போலீசார் மட்டும் அல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    ×