என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![போலீஸ் நிலையத்தில் காதலனுடன் தஞ்சம் அடைந்த கல்லூரி மாணவி- தந்தையின் 1 மணி நேர பாசப்போராட்டம் தோல்வி போலீஸ் நிலையத்தில் காதலனுடன் தஞ்சம் அடைந்த கல்லூரி மாணவி- தந்தையின் 1 மணி நேர பாசப்போராட்டம் தோல்வி](https://media.maalaimalar.com/h-upload/2023/07/13/1914705-kanyakumari.webp)
போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடியை படத்தில் காணலாம்.
போலீஸ் நிலையத்தில் காதலனுடன் தஞ்சம் அடைந்த கல்லூரி மாணவி- தந்தையின் 1 மணி நேர பாசப்போராட்டம் தோல்வி
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பிளஸ்சியா, கண்ணன் இருவரும் ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
- பிளஸ்சியாவின் தந்தை தனக்கும், தனது மகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எழுதி கொடுத்து விட்டு அங்கிருந்து கண்ணீர் மல்க சென்றார்.
நாகர்கோவில்:
பூதப்பாண்டி அருகே உள்ள திடல் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). ஐ.டி.ஐ. படித்துவிட்டு விவசாயம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பிளஸ்சியா (20). இவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் கடந்த 1 ஆண்டாக காதலித்து வந்தனர். இப்போது காதல் விவகாரம் பிளஸ்சியாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை கண்டித்தனர். ஆனால் அவர் கண்ணனுடன் தொடர்ந்து பழகி வந்தார்.
இதனால் பிளஸ்சியாவை ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் கொண்டு விட்டனர். அதன் பிறகும் அவர் கண்ணனுடன் பேசி வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த பிளஸ்சியா திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது உறவினர் ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் கண்ணன் பிளஸ்சியாவை கடத்தி சென்றதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிளஸ்சியா, கண்ணன் இருவரும் ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். தாங்கள் இருவரும் ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாகவும், இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து பிளஸ்சியா மற்றும் கண்ணனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இருவரது பெற்றோரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பிளஸ்சியாவை அவரது தந்தை தங்களுடன் வருமாறு அழைத்தார். ஒரு மணி நேரமாக போலீஸ் நிலையத்தில் பாசப்போராட்டம் நடந்தது.
ஆனால் பிளஸ்சியா, கண்ணனுடன் தான் வாழ்வேன் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் ஒரு மணி நேரமாக நடந்த பாச போராட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
இதையடுத்து பிளஸ்சியாவின் தந்தை தனக்கும், தனது மகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எனவே அவர் அணிந்திருக்கும் நகைகளை கழற்றி கொடுக்குமாறு கூறினார். உடனே பிளஸ்சியா தான் அணிந்திருந்த 3 பவுன் நகையை கழற்றி கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து பிளஸ்சியாவின் தந்தை தனக்கும், தனது மகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எழுதி கொடுத்து விட்டு அங்கிருந்து கண்ணீர் மல்க சென்றார். போலீசார் கண்ணனையும், பிளஸ்சியாவையும் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.