search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.2.50 லட்சம் இழப்பீடு செல்போன் விற்பனை நிறுவனத்திற்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
    X

    கோப்பு படம்

    ரூ.2.50 லட்சம் இழப்பீடு செல்போன் விற்பனை நிறுவனத்திற்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

    • செல்போன் 5 மாதத்திலேயே பழுதானதால் இழப்பீடு வழங்ககோரி கடந்த 2017-ம் ஆண்டு தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வாடிக்கையாளர் மனு அளித்தார்.
    • தேனி நுகர்வோர் நீதிமன்ற நீதிபதிகள் ரூ.2.50 இழப்பீடு வழங்க செல்வோன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள அரண்மனைப்புதூரை சேர்ந்த காமராஜ் மனைவி மீனா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 20-ந்தேதி தேனி பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள ஒரு செல்போன் கடையில் ரூ.22,500க்கு செல்போன் வாங்கினார். முன்னணி நிறுவன தயாரிப்பான அந்த செல்ேபானுக்கு ஓராண்டு உத்தரவாதம் வழங்கப்பட்டது.

    ஆனால் 5 மாதங்களில் செல்ேபான் பழுதானது. இதனையடுத்து அதனை பழுது நீக்கிதரும்படி சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அணுகினார். அந்த செல்போன் தண்ணீரில் விழுந்து பழுதாகி இருப்பதாகவும், உத்தரவாத அடிப்படையில் அதனை பழுதுநீக்கி தரமுடியாது என்றும் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் வாடிக்கையாளரான மீனா செல்போன் தண்ணீரில் விழவில்லை என கூறியதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

    இதனைதொடர்ந்து தனது செல்போனை மாற்றித்தரக்கோரியும், சேவை குறைபாடு மற்றும் முறையற்ற வணிகத்தால் தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் ஆகியவற்றுக்கு இழப்பீடு வழங்ககோரி கடந்த 2017-ம் ஆண்டு தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மீனா மனு அளித்தார்.

    இந்த மனுவின் அடிப்படையில் நிறுவனத்தின் கிளை மேலாளர், சென்னை நிர்வாக மேலாளர், செல்போன் தயாரிப்பு நிர்வாகி ஆகியோரிடம் தேனி நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சுந்தர், உறுப்பினர்கள் அசீனா, ரவி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது.

    முடிவில் செல்போன் நிறுவன விற்பனை கிளை மேலாளர், நிர்வாக மேலாளர், தயாரிப்பு நிறுவன நிர்வாகி ஆகியோர் கூட்டாக மீனாவுக்கு அவர் ஏற்கனவே வாங்கியிருந்த செல்போனை போன்று புதிய செல்போன் அல்லது அதற்குரிய தொகை ரூ.22500 வழங்கவேண்டும். முறையற்ற வர்த்தகம் மற்றும் சேவை குறைப்பாட்டிற்கு இழப்பீடாக ரூ.50ஆயிரம், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் ஆகியவற்றை தீர்ப்பு நகல் வழங்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.

    மேலும் வழக்கு செலவிற்காக ரூ.8ஆயிரம் வழங்கவேண்டும் எனவும் நுகர்வோர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

    Next Story
    ×