search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
    X

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை திறம்பட செயல்படுத்துவது குறித்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

    • பகுதி அளவிலான கூட்டமைப்பின் அலுவலக நிர்வாகிகளில் ஒருவரை கொண்டு அமைக்கப்படும்.
    • குறைந்தபட்ச கல்வி தகுதி 10ஆம் வகுப்பு வரை படித்தவராகவும் சமையல் திறன் கொண்டவராகவும், உறுப்பினராகவும் இருக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை திறம்பட செயல்படுத்துவது குறித்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    தருமபுரி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்பட்டு வரும் 48 அரசு தொடக்கப்பள்ளிகள், 9 அரசு நடுநிலைப்பள்ளிகள், 1 உயர்நிலை பள்ளி என மொத்தம் 58 அரசு பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டமானது இரண்டு கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.

    இத்திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக முதற்கட்டமாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டமானது இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் காலை உணவு திட்டம் தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டது.

    தருமபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 1.6.2023 அன்று நல்லம்பள்ளி, காரிமங்கலம், அரூர், தருமபுரி மற்றும் பென்னாகரம் ஆகிய 5 வட்டாரங்களிலும், இரண்டாம் கட்டமாக 15.7.2023 அன்று மொரப்பூர், பாப்பிரெட்டிபட்டி, கடத்தூர், மற்றும் ஏரியூர் ஆகிய 4 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படும்.

    இத்திட்டத்திற்கென ஊராட்சி, பேரூராட்சி அளவில் முதன்மை குழு ஊராட்சி மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் ஒரு பிரதிநிதி, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பின் அலுவலக நிர்வாகிகளில் ஒருவரை கொண்டு அமைக்கப்படும்.

    மகளிர் சுயஉதவிக்குழு, ஊராட்சி, பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களை தேர்வு செய்திடும் போது குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள உறுப்பினராகவும், அதே பகுதியை சேர்ந்தவராகவும், குறைந்தபட்ச கல்வி தகுதி 10ஆம் வகுப்பு வரை படித்தவராகவும் சமையல் திறன் கொண்டவராகவும், உறுப்பினராகவும் இருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற முதன்மை பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் நுகர்பொருட்கள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவு துறை மூலம் கொள்முதல் செய்யப்படும்.

    Next Story
    ×