search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோடை காலத்தையொட்டி ஈரோடு ஜவுளி சந்தையில் காட்டன் துணிகள் விற்பனை அதிகரிப்பு

    • கடந்த ஒரு வாரமாக காட்டன் சேலைகள், வேட்டிகள், லுங்கிகள், பனியன்கள், காட்டன் சுடிதார் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    • 3 ஆயிரம் தொழிலாளர்கள் ஜவுளி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) பன்னீர்செல்வம் பார்க் அருகே செயல்பட்டு வருகிறது. ஜவுளி சந்தையில் 230 தினசரி கடைகளும், 720 வாரச்சந்தைகளும் செயல்பட்டு வருகின்றன. ஜவுளி சந்தையில் நடக்கும் வாரச்சந்தை உலகப் புகழ்பெற்றது. ஒவ்வொரு திங்கட்கிழமை காலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது. அசோகபுரம், சென்ட்ரல் மார்க்கெட் போன்ற பகுதிகளிலும் வார ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது.

    கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வெளி மாநில வியாபாரிகள் திரண்டு வந்து மொத்த விற்பனையில் துணிகளை வாங்கி செல்கின்றனர். இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் வியாபாரிகளும் துணிகளை வாங்கி செல்கின்றனர். மற்ற இடங்களை காட்டிலும் ஜவுளி சந்தையில் துணிகளின் விலை குறைந்த விலையில் விற்கப்படுவதால் இங்கு எப்போதும் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

    ஜவுளி சந்தையில் அந்தந்த பருவத்திற்கு ஏற்ற துணிகள் விற்கப்படுவது தனி சிறப்பு. சாதாரண நாட்களில் ரூ.3 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். ஆனால் தீபாவளி, பொங்கல், புது வருடம், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை வாரச்சந்தையில் வர்த்தகம் நடைபெறும். குழந்தைகளுக்கான ரெடிமேட் சட்டைகள், பெண்களுக்கான சுடிதார், நைட்டிகள், சேலைகள், ஆண்களுக்கு லுங்கி, வேட்டி சட்டைகள், துண்டுகள், பனியன் போன்றவற்றை வெளி மாநில வியாபாரிகள் லட்சக்கணக்கில் வாங்கி செல்கிறார்கள்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக ஒரு மாதமாக ஜவுளி சந்தை வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்றது. தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் அடியோடு சரிந்தது. ரூ.150 கோடி மதிப்பிலான துணிகள் குடோனில் தேங்கியது. தற்போது தேர்தல் முடிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளதால் ஜவுளி வியாபாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் இப்போதே தொடங்கிவிட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு ஜவுளி சந்தையில் கோடை காலத்தையொட்டி காட்டன் துணிகள் வரத்து அதிகரித்து அதன் விற்பனையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக காட்டன் சேலைகள், வேட்டிகள், லுங்கிகள், பனியன்கள், காட்டன் சுடிதார் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து ஜவுளி வாரச்சந்தை அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:

    ஈரோடு ஜவுளி சந்தையில் கோடைகால விற்பனை தொடங்கியுள்ளது. கோடை காலத்தை முன்னிட்டு மக்கள் காட்டன் சம்பந்தமான துணிகளை உடுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், இளைஞர்கள் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் அவர்களுக்கு ஏற்ற வகையில் தனித்தனியாக விதவிதமாக காட்டன் துணிகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    பெண்களுக்கு காட்டன் சுடிதார் ரூ.350 முதல் ரூ.700 வரை தரம் தரமாக விற்பனைக்கு வந்துள்ளன. காட்டன் சேலைகள் ரூ.200 முதல் ரூ.500 வரை விற்பனைக்கு உள்ளது. காட்டன் வேட்டிகள் ரூ.200 முதல் ரூ. 300 வரை விற்பனைக்கு உள்ளது. காட்டன் லுங்கிகள் ரூ.180 முதல் ரூ.240 வரை விற்பனையாகி வருகிறது. பனியன்கள் ரூ.45 முதல் ரூ.60 வரை விற்பனை ஆகி வருகிறது. காட்டன் துண்டுகள் ரூ.30 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா, பெரிய மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கோபி கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருவிழா அடுத்தடுத்து வர உள்ளதால் மஞ்சள், சிவப்பு கலர் காட்டன் வேஷ்டிகள், சேலைகள், துண்டுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சேலைகள் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. வேட்டிகள் ரூ.150 வரையும் துண்டுகள் ரூ.50 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

    இது போக வெளிமாநில ஆடர்கள் நிறைய வர தொடங்கியுள்ளது. குறிப்பாக காட்டன் சம்பந்தமான துணிகளை அவர்கள் விரும்பி ஆர்டர் செய்து வருகின்றனர். நாங்களும் ரெயில்கள், லாரிகள் மூலம் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். 3 ஆயிரம் தொழிலாளர்கள் ஜவுளி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக மந்த நிலையில் இருந்த ஜவுளி வியாபாரம் தற்போது கோடை வெப்பம் தொடங்கியதால் அதிகரித்துள்ளது. இதனால் வாரச்சந்தை நடைபெறும் நாள் மட்டுமின்றி தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஜவுளி சந்தைக்கு வருகை தந்து மொத்தமாக ஜவுளிகளை கொள்முதல் செய்கிறார்கள். மேலும் தற்போது பங்குனி, சித்திரை மாதங்கள் வருவதால் கோவில் விழாக்கள் அதிக அளவில் நடைபெறும். எனவே இனி வரும் காலங்களில் விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால் வியாபாரிகள் அதிக அளவில் காட்டன் துணிகளை வாங்கி குவித்து வைத்துள்ளனர்.

    Next Story
    ×