என் மலர்
உள்ளூர் செய்திகள்
டிசம்பர் 15-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
- அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19 (vii) மற்றும் 25 (ii)-ன்படி, வருகின்ற 15.12.2024 (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்திட கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் 1½ ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சட்டசபை தேர் தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளையும் போல அ.தி.மு.க.வும் தயாராகி வருகிறது.
அந்த வகையில் டிசம்பர் 15-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது.
இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், கூட்டணி குறித்தும் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
கட்சியின் வளர்ச்சிப் பணிகள் பற்றியும் தீர்மானங்கள் இயற்றப்பட உள்ளது.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்ற பிறகு அவரது புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த அட்டைகள் முறையாக கட்சியினருக்கு சென்று சேரவில்லை என்று எழுந்த புகாரின் பேரில் அதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அமைக்கப்பட்ட கள ஆய்வு குழுவினரும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பொதுக்குழு கூடுவதற்கு முன்னதாக அவர்கள் தங்களது அறிக்கையை கட்சி தலைமையிடம் அளிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.