என் மலர்
உள்ளூர் செய்திகள்
சர்வர் பிரச்சனையால் பத்திரப்பதிவு தாமதம்
- சர்வரில் அடிக்கடி பிரச்சனை ஏற்படுவதால் பத்திர பதிவு செய்வதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டு பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
- 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஒருங்கிணைந்த பத்திர பதிவு அலுவலகத்திற்கு பொதுமக்கள் பத்திர பதிவு செய்ய வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி சாலை விநாயகர் கோவில் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இரண்டு தளங்களில் செயல்படும் இந்த அலுவலகத்தில் கிழக்கு, மேற்கு என்று பிரிக்கப்பட்டு தரைதளத்திலும், மேல் தளத்திலும் பத்திர பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இங்கு பத்திரம் பதிவு செய்வதற்காக தருமபுரி, நல்லம்பள்ளி, அதியமான் கோட்டை, தொப்பூர், உங்கரணஅள்ளி, வெ ங்கட்டம்பட்டி, இலளிகம், செம்மாண்டகுப்பம், செட்டிகரை, குப்பூர், நாயக்கன் கொட்டாய் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் பத்திர பதிவு தொடர்பான பல்வேறு பணிகளுக்கு தினமும் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பத்திரங்கள் பதிவு செய்ய ப்படும் அலுவலகங்களில் இதுவும் ஓன்று.
இங்கு தினமும் 100 டோக்கன்கள் வழங்க ப்பட்டு பத்திரபதிவு நடை பெறுகிறது.
சுபமுகூர்த்த நாட்களில் சுமார் 150 டோக்கன்கள் வரை வழங்கப்பட்டு பத்திரப்பதிவு நடைபெறும்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இணையத்தள சர்வரில் அடிக்கடி பிரச்சனை ஏற்படுவதால் பத்திர பதிவு செய்வதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டு பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அதேபோல் நேற்று முதல் சர்வர் பிரச்சனை ஏற்பட்டு பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
காலை 10 மணிமுதல் முதல் மாலை 3 மணி வரை சர்வர் பிரச்சினை ஏற்பட்டு 100 டோக்கன் வழங்கப்பட்டதில் 3.30 மணிக்கு மேல் சுமார் நான்கு டோக்கன்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பத்திர பதிவு செய்ய வந்தவர்கள் கூறும்போது:-
தருமபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஒருங்கிணைந்த பத்திர பதிவு அலுவலகத்திற்கு பொதுமக்கள் பத்திர பதிவு செய்ய வருகின்றனர்.
அவ்வாறு வரும் பொது மக்களுக்கு உடனுக்குடன் பத்திர பதிவு செய்ய முடிவதில்லை சர்வர் பிரச்சினை எனக் கூறுவதால் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
சில சமயங்களில் நள்ளிரவு வரை பத்தி ரப்பதிவு நடைபெறுகிறது. இதனால் பொதுமக்களுக்கு காலவிரயம், வருவாய் இழப்பு, தேவையின்றி செலவுகள் உள்ளிட்டவை ஏற்படுகின்றன.
மேலும் முகூர்த்த நாளில் நல்ல நேரத்தில் பத்திரம் பதிவு செய்ய திட்டமிட்டவர்கள் அந்த நேரத்தில் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடையும் சம்பவங்களும் நடைபெறுகிறது.
எனவே இணையத்தள சர்வரை மேம்படுத்தி பத்திரப்பதிவு விரைவாக நடைபெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.