என் மலர்
உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் 4 டன் சம்பங்கி தேக்கம்
- திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு பன்னீர் ரோஸ், செண்டுமல்லி, சம்பங்கி, மல்லிகை, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பூக்கள் விற்பனைக்கு வந்தது.
- 4 டன் சம்பங்கி பூக்கள் தேக்கமடைந்து ள்ளதால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பேரறிஞர் அண்ணா வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் சின்னாளபட்டி, செம்பட்டி, கன்னிவாடி, தாடிக்கொம்பு, வெள்ளோடு, சிலுவத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்படும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பூக்கள் வரத்தைப் பொறுத்து விலைகள் நாள்தோறும் நிர்ணயிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இன்று பூ மார்க்கெட்டிற்கு பன்னீர் ரோஸ், செண்டுமல்லி, சம்பங்கி, மல்லிகை, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பூக்கள் விற்பனைக்கு வந்தது. இதில் 5 டன் சம்பங்கி வந்தது. வரத்து அதிகரிப்பு மற்றும் விசேஷ தினங்கள் இல்லை, சென்ட் தொழிற்சாலைக்கு பூக்கள் கொள்முதல் செய்யாதது ஆகிய காரணத்தினால் கிலோ ரூ.5க்கு விலை போனது. இதனால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
இன்று மட்டும் 4 டன் சம்பங்கி பூக்கள் தேக்கமடைந்து ள்ளதால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். கடந்த வாரத்தில் கிலோ ரூ.100க்கு விற்கப்பட்ட சம்பங்கி இன்று கிலோ ரூ.5க்கு கூட விலை போகவில்லை. அதேபோல் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்த பன்னீர் ரோஸ், விலைபோகாத காரணத்தால், செண்ட் தொழிற்சாலைக்கு அனுப்புவதற்காக சாலையில் உலர வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஜக்காபட்டியை சேர்ந்த விவசாயி அய்யம்பெருமாள் கூறுகையில்,
ஒரு ஏக்கரில் சம்பங்கி பயிரிட்டேன். அதில் 70 கிலோ இன்று வரத்து வந்தது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் போதிய விலை இல்லை. செண்ட் நிறுவனமும் பூக்களை கொள்முதல் செய்ய முன்வரவில்லை. இதனால் 70 கிலோ சம்பங்கி ரூ.200க்கு விலை போனது. ஏக்கருக்கு எடுப்பு கூலி மற்றும் பராமரிப்பு செலவு சேர்த்து ரூ.700 செலவு ஆன நிலையில், ரூ.200 விலை போனது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.