என் மலர்
உள்ளூர் செய்திகள்
நீர் வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்
- 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது.
சேலம்:
கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த மாதம் 30-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து அணைக்கு வந்த உபரிநீர் 16 கண் பாலம் வழியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
இதன் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு வசித்த பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் குறைந்தது. இதன் காரணமாக 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் வெளியேற்றப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
இதற்கிடையே மீண்டும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து உபரிநீர் மீண்டும் 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டு வந்தது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதனால் 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டு வந்த உபரிநீர் நேற்று இரவு 10.30 மணியளவில் நிறுத்தப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து பவர்ஹவுஸ் வழியாக டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியும், கால்வாய் வழியாக வினாடிக்கு 500 கனஅடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.