என் மலர்
உள்ளூர் செய்திகள்
துடியலூர் அருகே முதியவர் காட்டு யானை தாக்கி பலி: பொதுமக்கள் சாலைமறியல்
- முதியவர் தினமும் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்வது வழக்கம்.
- ஒற்றை காட்டு யானை தடாகம் சாலையை கடந்துள்ளது.
கவுண்டம்பாளையம்:
கோவை துடியலூர் அருகே பன்னிமடை தாளியூரை சேர்ந்தவர் நடராஜ்(69). இவர் அந்த பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வந்தார்.
இவர் தினமும் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதன்படி இன்று அதிகாலையும், தடாகம் சாலையில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார்.
அப்போது வனத்தை விட்டு வெளியேறி அந்த பகுதியில் நடமாடிய வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை தடாகம் சாலையை கடந்துள்ளது.
யானை வருவதை பார்த்ததும் நடராஜ் அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் அதற்குள்ளாகவே யாைன துரத்தி சென்று நடராஜை தந்தத்தால் குத்தி தூக்கி வீசியது.
இதில் நடராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்ததும் நடராஜின் உறவினர்கள், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தடாகம் சாலையில் குவிந்தனர்.
அவர்கள், காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை பிடித்து வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. பள்ளி பஸ்கள் சாலையில் நின்றிருந்தன.
தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் போலீசார், வனத்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். சாலை மறியல் காரணமாக தடாகம் சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., பி.ஆர்.ஜி அருண்குமார் யானை தாக்கி உயிரிழந்த நடராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.