என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![இலங்கையில் இருந்து அகதியாக வந்த மூதாட்டி உயிரிழப்பு- கணவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை இலங்கையில் இருந்து அகதியாக வந்த மூதாட்டி உயிரிழப்பு- கணவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை](https://media.maalaimalar.com/h-upload/2022/07/03/1723041-death.jpg)
இலங்கையில் இருந்து அகதியாக வந்த மூதாட்டி உயிரிழப்பு- கணவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- கடந்த மாதம் 29-ந்தேதி தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் எதிரே உள்ள மணல் திட்டில் வயதான தம்பதி இருவர் மயங்கி கிடந்தனர்.
- கணவர் பெரியண்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை:
இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக, அங்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.
இதையடுத்து அங்கு வாழ்ந்து வந்த தமிழர்கள் பலர் குடும்பத்துடன் அகதிகளாக தமிழகத்திற்கு வர தொடங்கினர். கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த சுமார் 100 பேர் அதிகளாக வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் எதிரே உள்ள மணல் திட்டில் வயதான தம்பதி இருவர் மயங்கி கிடந்தனர். அவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார், ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
அவர்கள் யார்? என்று விசாரித்தபோது இலங்கை மன்னார் மாவட்டம் பிருங்கன்பட்டியை சேர்ந்த பெரியண்ணன் (வயது 82), அவரது மனைவி பரமேஸ்வரி (75) என்பதும், இலங்கையில் கூலிவேலை பார்த்து வந்த வயதான தம்பதி இருவரும், அங்கு நிலவிய பொருளாதார நெருக்கடியில் வாழ வழியின்றி தமிழகத்திற்கு வந்ததும் தெரியவந்தது.
இரவு நேரத்தில் கடல் நீரில் அதிக நேரம் நின்றபடி இருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர்கள் தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருந்தனர். இதனால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 29-ந்தேதி முதல் அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மூதாட்டி பரமேஸ்வரி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார். அவரது கணவர் பெரியண்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதியாக கணவருடன் வந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.