என் மலர்
உள்ளூர் செய்திகள்
தேன்கனிக்கோட்டை பகுதியில் இடம்பெயர்ந்த ஒற்றை யானை
- காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர்.
- வனத்துறையினர் பட்டாசு வெடித்து ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றுப்புற கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்த கிரி என்ற ஒற்றை காட்டு யானை விவசாயிகள் மற்றும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது.
காது கேட்காத இந்த ஒற்றை காட்டு யானையை பொதுமக்கள் விவசாயிகள் விரட்டினாலும் அது அசராமல் அப்படியே நிற்கும், இந்த காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் இந்த கிரி ஒற்றை காட்டு யானை தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து பல்வேறு கிராமங்கள் வழியாக தற்போது கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமம் அருகே வந்துள்ளது. அந்த பகுதியில் சாலையோரம் சுற்றித்திரிந்த இந்த காட்டு யானை குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்து ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
காது கேட்காத இந்த கிரி ஒற்றை காட்டு யானையால் போடிச்சிப்பள்ளி, சினிகிரிப்பள்ளி, பென்னிகல் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பொதுமக்கள் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். விவசாயிகள் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.