என் மலர்
உள்ளூர் செய்திகள்
எண்ணூரில் கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக மாறியது: மீனவர்கள் அதிர்ச்சி
- மீன்வளத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து ஆற்று நீர் மஞ்சளாக மாறியதை படம்பிடித்து சென்றனர்.
- தண்ணீரை பாட்டில்களில் சேகரித்து பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
எண்ணூர் :
சென்னை எண்ணூரில் கொசஸ்தலை ஆறும், கடலும் கலக்கும் முகத் துவார பகுதியில் ஏராளமான மீன்களும், நண்டு, எரால்களும் கிடைக்கும். இங்கு கிடைக்கும் மீன்கள் மிகவும் சுவையாக இருக்கும் என்பதால் மீன் பிரியர்கள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள். இந்த ஆற்றை நம்பி எண்ணூரை சுற்றி உள்ள எண்ணூர் குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம், காட்டுகுப்பம், சிவன் படை வீதி குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராம மக்கள் இந்த ஆற்றில் பைபர் படகுகள் மூலம் மீன் பிடித்து வாழ்ந்து வருகின்றனர்.
நேற்று மதியம் 1½ மணியளவில் திடீரென எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி மஞ்சள் நிறமாக மாறியது. போக போக அது ஆறு முழுவதும் பரவி ஆறு மஞ்சள் நிறமாக காட்சி அளித்தது.
இதனை பார்த்து அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள், படகுகளை கரைக்கு திருப்பி விட்டு வந்தனர். மேலும் இதுபற்றி மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து ஆற்று நீர் மஞ்சளாக மாறியதை படம்பிடித்து சென்றனர். மேலும் அந்த தண்ணீரை பாட்டில்களில் சேகரித்து பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பார்த்தசாரதி கூறும்போது, "எண்ணூர் கொசஸ்தலை ஆற்று பகுதியை சுற்றி ஏராளமான ரசாயன கம்பெனிகள் உள்ளன. அதில் ஏதோ ஒரு கம்பெனி தான் ரசாயன கலவையை ஆற்றில் கலந்துள்ளது. இதனால் மீன்கள் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன் மீன்கள் செத்து மடிய வாய்ப்புள்ளது. எனவே சுத்திகரிக்காமல் இதுபோன்ற கழிவுகளை ஆற்றில் விடும் தொழிற்சாலை மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
எண்ணூர் கொசஸ்தலை ஆறு மஞ்சளாக மாறியது அப்பகுதி மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.