என் மலர்
உள்ளூர் செய்திகள்
பண மாலையுடன் வந்த சுயேட்சை வேட்பாளருக்கு அனுமதி மறுப்பு
- பல்வேறு தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன்.
- ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமான சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர்.
அப்போது அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பின் தேசிய தலைவராக இருக்கும் அபி ஆழ்வார் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார்.
அப்போது அவரது கழுத்தில் 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிந்து வந்தார். ஈரோடு மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் அருகே வந்த போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து கழுத்தில் பணம் மாலையுடன் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்றனர். இதனால் அந்த நபர் ஆத்திரமடைந்து போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அபி ஆழ்வார் கூறும்போது, இந்தியா முழுவதும் ஊழலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கிறேன். அதிகாரிகள் லஞ்சம் வாங்க கூடாது. பொதுமக்களும் லஞ்சம் கொடுத்து காரியங்களை சாதிக்கக்கூடாது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன்.
தற்போது 52-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருக்கிறேன். ஆனால் போலீசார் என்னை அனுமதிக்கவில்லை என்றார்.
பின்னர் சிறிது நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த பண மாலையை கழற்றி கையில் வைத்துக் கொண்டார். அதன் பின்னர் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டார். இதனால் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.