search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டிய பிரபல மதுரை கொள்ளையன் கைது
    X

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டிய பிரபல மதுரை கொள்ளையன் கைது

    • பல்வேறு மாவட்டங்களில் 60-க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகள் இருந்தது தெரியவந்தது.
    • கைது செய்யப்பட்ட பெரியசாமியை போலீசார் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இடையகோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை போவது வழக்கமாக இருந்தது.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின் பேரில் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் மேற்பார்வையில் ரெட்டியார்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர்மைதீன் தலைமையில் போலீசார் வேளாங்கண்ணி, கார்த்திக்ராஜன், ஜோசப்மோரிஸ்ராஜ், காங்குமணி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார், திருட்டு நடந்த வீடுகளின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் திருட்டு நடந்த வீடுகளுக்கு அருகே மோட்டார் சைக்கிளில் சுற்றிக்கொண்டு வருவது போல காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சியில் உள்ள உருவத்தைக்கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் சாலையில் ரெட்டியார்சத்திரத்தை அடுத்து தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு மோட்டர் சைக்கிளில் போலீசாரை பார்த்தும் ஒரு வாலிபர் நிற்காமல் வேகமாக சென்றார். உடனே போலீசார் சிறிது தூரம் மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று வாலிபரை மடக்கிப் பிடித்து ரெட்டியார்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த பெரியசாமி என்ற பொட்டுக்கடலை (வயது 25) என்பது தெரிந்தது.

    பிடிபட்ட பெரியசாமியிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியபோது ரெட்டியார்சத்திரம் பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு பணம், நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

    மேலும் அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த 4 மோட்டார் சைக்கிள்கள், கொள்ளையடிக்க பயன்படுத்திய முகமூடி, கையுறை, அரிவாள், கத்தி, இரும்பு கம்பி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பெரியசாமியை கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் மீது திண்டுக்கல், மதுரை, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 60-க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகள் இருந்தது தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட பெரியசாமியை போலீசார் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×