என் மலர்
உள்ளூர் செய்திகள்
கனமழையால் 30 ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து சேதம்
- கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து வருகிறது.
- நெற்கதிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோழவந்தான்:
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகலில் கொளுத்தும் வெயிலும், மாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழையும் பெய்து வருகிறது. இந்த பருவம் தவறிய மழையால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.
இந்தநிலையில் சோழவந்தான் அருகேயுள்ள இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம், பேட்டை மற்றும் சோழவந்தான் பகுதியில் கிணற்று பாசனம் மூலம் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் செய்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் இந்த நெல் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இச்சமயத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து வருகிறது.
பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்ததில் நெற்கதிர்கள் பெரும்பாலானவை வயலில் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் மன வேதனை அடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரத்தில் முதல் போக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு அதன் பிறகு விவசாயம் நடைபெறும். கிணறு வைத்துள்ள சில விவசாயிகள் இதற்கு முன்பாகவே விவசாயம் செய்து நெல் அறுவடை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதுபோல இந்த ஆண்டு இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம், சோழவந்தான், நாச்சி குளம் ரோடு ஆகிய பகுதிகளில் கிணறு மூலம் நெல் விவசாயம் செய்துள்ளனர்.
தற்போது பலத்த காற்றுடன் வீசிய கனமழையால் சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் விவசாயம் செய்து அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கிறது. இதில் 30 ஏக்கர் நிலத்தில் விளைந்த நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்துள்ளது. சேதம் அடைந்த நெற்கதிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது சாய்ந்து கிடக்கும் நெற்கதிர் உள்ள நிலங்களை விவசாயிகள் காவல் காத்து வருகின்றனர்.
ஏனென்றால் சாய்ந்து கிடக்கும் நெற்கதிர்களை அறுவடை செய்த வயல் என்று கால்நடைகள் இறங்கி பாழாக்கிவிடும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.