என் மலர்
உள்ளூர் செய்திகள்
பீரோ தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்
- நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு ஒருவழியாக தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து சின்னாளபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னாளப்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பூஞ்சோலையில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் முத்துராஜ் (வயது 50) என்பவர் இரும்பு பீரோ, கட்டில் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார்.
பொங்கல் பண்டிகையையொட்டி பீரோ கம்பெனிக்கு கடந்த சில தினங்களாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த அந்த பீரோ கம்பெனியில் இன்று காலை பெயிண்ட் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து கரும்புகை வெளி வந்தது. இதனை அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சில நிமிடங்களில் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. பொதுமக்கள் கம்பெனியில் தீப்பற்றி எரிவதை பார்த்து தங்கள் வீடுகளுக்கும் தீ பரவி விடுமோ என்ற அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
மேலும் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ தொடர்ந்து கொளுந்துவிட்டு எரிந்ததால் பெரும் சிரமம் ஏற்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு ஒருவழியாக தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
இருந்த போதும் கம்பெனியில் இருந்த பெயிண்ட், பீரோ, கட்டில், தளவாட பொருட்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகியது. தீ விபத்துக்கான காரணம் குறித்து சின்னாளபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.