என் மலர்
உள்ளூர் செய்திகள்
பாம்பன் பாலத்தில் மீனவர்கள் சாலை மறியல்- மத்திய, மாநில அரசுகள் மீது குற்றச்சாட்டு
- மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
- அதுவரை எங்களது போராட்டம் தொடரும்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 9-ந்தேதி 354 விசைப்படகுகளில் 1,500-க்கும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய கடல் எல்லையில் நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஜெயராஜ், ராஜா, கீதன் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப்படகுகளை பறிமுதல் செய்து அதில் இருந்த 23 மீனவர்களை 10-ந்தேதி அதிகாலையில் சிறைபிடித்தனர். பின்னர் அவர்கள் 23 பேரும் இலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து அவர்களை வருகிற 25-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் ராமேசுவரம் மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக, மீனவர்கள் சிறைப்பிடிப்பை தொடர்ந்து, ராமேசுவரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
அதில் ஏற்பட்ட முடிவின்படி பாம்பன் பாலத்தில் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்தை திரும்பப் பெறக்கோரி நேற்று ராமேசுவரம் தாசில்தார் செல்லப்பா, ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, விசைப்படகு மீனவப் பிரதிநிதி சேசுராஜா, நாட்டுப்படகு மீனவப் பிரதிநிதி ராயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற அமைதிக்குழு கூட்டம் நடைபெற்றது.
ஆனால் இக்கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாததால் திட்டமிட்டபடி பாம்பன் பாலத்தில் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என மீனவ பிரதிநிதிகள் கூறினர். அதன்படி இன்று காலை முதலே பாம்பன் சாலை பாலத்தில் ஏராளமான மீனவர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் பாலத்தின் முகப்பு பகுதியில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், அவர்களுடன் பறிமுதலான விசைப்படகு களையும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும், உடனடியாக மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதில் ராமேசுவரம், மண்டபம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், மீனவ சங்க பிரதிநிதிகள், மீனவர்களின் குடும்பத்தினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் மீண்டும் மீனவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இலங்கை அரசு சுமார் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை சிறை பிடித்துள்ளது. மத்திய அரசு இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு மீனவ இனத்தை முற்றிலும் அழிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது.
மீனவர் நலம் கருதி மத்திய அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வேண்டும். இதை செய்யாவிட்டால் விரைவில் புதிய ரெயில் பாலத்தில் மறியல் போராட்டம் நடைபெறும். தமிழக மீனவர்களின் கைது தொடர்கதையாக உள்ளது. மாநில அரசிடம் 40 எம்.பி.க்கள் உள்ள நிலையில் அவர்கள் பாராளுமன்றத்தில் தமிழக மீனவர்களை நலன் கருதி குரல் எழுப்ப வேண்டும்.
ஒவ்வொரு மீனவரும் ஆயிரம் முதல் 1,500 ரூபாய் கூலிக்கு வேலை செய்கின்றனர். அவர்களை பிடிக்கும் இலங்கை அரசு அவர்கள் மீது ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கிறது. அதை எப்படி ஏழை மீனவனால் செலுத்தி அங்கிருந்து மீண்டு தமிழகம் வரமுடியும். மத்திய, மாநில அரசுகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.