என் மலர்
உள்ளூர் செய்திகள்
பெண்கள் தனியாக இருப்பதை நோட்டமிட்டு நள்ளிரவில் வீடுகளின் கதவை தட்டி மிளகாய் பொடி தூவி செல்லும் கும்பல்
- மக்கள் ஓடி வருவதை பார்த்த அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
- போலீசார் ரோந்து மேற்கொண்டு, அந்த மர்மநபரை பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர பகுதியில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை குறித்து வைத்து மர்மநபர் ஒருவர் வீடுகளின் கதவை தட்டி வருகிறார்.
மேலும் கதவை திறக்கும் பெண்களின் மீது மிளகாய் பொடியையும் தூவி சென்று வருகிறார். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குன்னூர் வி.பி.தெரு பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் சம்பவத்தன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் வீட்டு கதவினை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. நள்ளிரவு நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டதால் அந்த பெண் அதிர்ச்சியானார்.
சுதாரித்து கொண்ட அந்த பெண் வீட்டின் கதவை திறக்காமல், வீட்டின் மேல் பகுதியில் வசிப்பவர்களை போனில் தொடர்பு கொண்டு, கதவை யாரோ தட்டுகிறார்கள். யார் என தெரியவில்லை என தெரிவித்தார். உடனே அந்த வீட்டில் இருந்தவர், வீட்டின் விளக்கை எரியவிட்டார். இதனால் அதிர்ச்சியான மர்மநபர் அங்கிருந்து ஓடி விட்டார்.
மீண்டும் 1 மணி நேரத்திற்கு பின்பு அதே மர்மநபர், மீண்டும் அந்த பகுதிக்குள் நுழைந்தார். அந்த பகுதியில் குழந்தையுடன் தனியாக வசித்து வரும் பெண்ணின் வீட்டின் அருகே சென்ற நபர், அந்த வீட்டின் கதவை தட்டியுள்ளார். இரவில் யார் கதவை தட்டுகிறார்கள் என அந்த பெண்ணும் கதவை திறந்துள்ளார். அப்போது வெளியில் நின்றிருந்த மர்மநபர், தான் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை, அந்த பெண்ணின் முகத்தில் வீசினார்.
இதனால் அதிர்ச்சியான அந்த பெண் சத்தம் போட்டார். பெண்ணின் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் வீடுகளை திறந்து வெளியில் ஓடி வந்தனர். மக்கள் ஓடி வருவதை பார்த்த அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து பொதுமக்கள், குன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அங்குள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் தெருவில் ஒரு நபர் கையில் பையுடன் சுற்றுவதும், ஒரு வீட்டின் அருகே வந்து கதவை தட்டும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
அந்த காட்சிகளை கைப்பற்றி அந்த நபர் யார்? உள்ளூரை சேர்ந்தவரா? அல்லது வெளியூர் நபரா? நள்ளிரவு நேரத்தில் சுற்றி திரியும் அந்த நபர் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் இங்கு வந்தரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் கன்டோன்ட்மென்ட் அலுவலகம் செல்லும் சாலையோரத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர், ஒரு வீட்டின் கதவை வேகமாக தட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன வீட்டில் இருந்த பெண், ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது வெளியில் மர்மநபர் நிற்பதை பார்த்ததும், உடனடியாக அருகே உள்ளவர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து வெளியில் ஓடி வந்தனர். மக்கள் வருவதை பார்த்த நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தனியாக இருக்கும் பெண்களின் வீடுகளை குறி வைத்து மர்மநபர் கதவை தட்டுவதும், கதவை திறக்கும் பெண்களின் மீது மிளகாய் பொடியை வீசி செல்லும் சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த பகுதியில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து மேற்கொண்டு, அந்த மர்மநபரை பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.