search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப பிரச்சனையால் விபரீதம்- மகன், மகளை கொன்று தம்பதி தற்கொலை
    X

    குடும்ப பிரச்சனையால் விபரீதம்- மகன், மகளை கொன்று தம்பதி தற்கொலை

    • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே சிறுவலூர் மீன் கிணறு, சின்ன மூப்பன் வீதியைச் சேர்ந்தவர் தன சேகர் (வயது 36). இவருக்கும் விரியங்கிணற்று பாளையத்தை சேர்ந்த பாலாமணி என்பவருக்கும் இடையே கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இவர்களுக்கு 10 வயதில் வந்தனா என்ற மகளும், 7 வயதில் மோனீஸ் என்ற மகனும் உள்ளனர். வந்தனா 5-ம் வகுப்பும், மோனீஸ் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். தனசேகரும், பாலாமணியும் வெள்ளாங்கோவிலில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

    தனசேகர் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று கணவன்-மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரத்தில் தென்னை மரத்தில் வண்டுகளை கட்டுப்படுத்தும் விஷ மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து மகனுக்கும், மகளுக்கும் கொடுத்துள்ளனர். பின்னர் கணவன்-மனைவி இருவரும் விஷத்தை குடித்துள்ளனர். வந்தனா, மோனீஸ் இருவரும் குடித்த போது கசப்பு காரணமாக கீழே துப்பி விட்டு கதறி அழுதனர்.

    அதற்குள் தனசேகரனும், பாலமணியும் விஷம் குடித்து உயிருக்கு போராடினர். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரது வீட்டுக்கு ஓடி வந்தனர். நான்கு பேரையும் மீட்டு பெருந்துறை உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே, தனசேகரனும் பாலமணியும் உயிரிழந்தனர். குழந்தைகள் வந்தனாகவும், மோனீசும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் வந்தனா, மோனீஸ் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×