என் மலர்
உள்ளூர் செய்திகள்

குஜிலியம்பாறை அருகே 70 பவுன் நகை கொள்ளையடித்த வடமாநில வாலிபர் கைது

- புகாரின் பேரில் குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- போலீசார் கலாமை கைது செய்து அவரிடம் இருந்து நகைகளை மீட்டனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கரிக்காலியில் தனியார் சிமெண்ட் ஆலை குடியிருப்பு உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி இங்கு புகுந்த கொள்ளையர் சிமெண்ட் ஆலை பணியாளர்கள் கார்த்திகேயன், வேல்முருகன், தாமரைக்கண்ணன், பழனிசாமி, கருப்பையா, கவியரசன் ஆகியோரது வீடுகளின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 70 சவரன் நகை, ரூ.1 லட்சம், வெள்ளி குத்துவிளக்கு, டம்ளர் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் மத்தியபிரதேசம் தார் மாவட்டம் தண்டா கிராமத்தை சேர்ந்த திலீப் மகன் கலாம் (24) என்பவருக்கு கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மத்தியபிரதேசம் விரைந்த போலீசார் கலாமை கைது செய்து அவரிடம் இருந்து நகைகளை மீட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அவர் போலீசில் இருந்து தப்பிக்க முயன்ற போது கால் முறிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கலாமை போலீசார் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்களுக்கு கால்முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் மாவுக்கட்டு போடப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.