என் மலர்
உள்ளூர் செய்திகள்
லாரியில் கடத்த முயன்ற 12 டன் ரேசன் அரிசி பறிமுதல்
- குமரி மாவட்ட பதிவு எண் கொண்ட டாரஸ் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
- ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி அனுப்பும் நபரையும், லாரியின் உரிமையாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
கடையநல்லூர்:
தமிழகத்தில் இருந்து செங்கோட்டை வழியாக அதிக அளவில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாருக்கு பொதுமக்களிடம் இருந்து தொடர்ச்சியாக புகார் வந்தது.
அதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கேரளாவிற்கு செல்லும் சரக்கு வாகனங்களை கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சாமுவேல் ராஜ், தீபன் குமார் மற்றும் போலீசார் கடையநல்லூர் வழியாக கேரளாவுக்கு செல்லும் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணாபுரம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது குமரி மாவட்ட பதிவு எண் கொண்ட டாரஸ் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் லாரியின் ஓரங்களில் கோழி தீவனங்களை வைத்துவிட்டு மையப்பகுதியில் நூற்றுக்கணக்கான ரேசன் அரிசி மூட்டைகளை மறைத்து வைத்து கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசாரின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் லாரியுடன் அதில் இருந்த 12 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா வேம்புவிளை பாலப்பள்ளம் என்ற ஊரை சேர்ந்த லாரியின் டிரைவர் அசோக் (வயது 34) என்பவரை கைது செய்தனர். ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி அனுப்பும் நபரையும், லாரியின் உரிமையாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்.