என் மலர்
உள்ளூர் செய்திகள்
தேனி மாவட்டத்தில் மீண்டும் கனமழை :கும்பக்கரை அருவியில் 20-ம் நாளாக தடை
- கும்பக்கரை அருவில் கடந்த 20 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டமும் முழுகொள்ளளவை எட்டி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புவரை வடகிழக்கு பருவமழை வெளுத்துவாங்கியது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்து நின்றுவிட்டது. தற்போது நேற்று மீண்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
போடி, உத்தமபாளையம், பெரியகுளம், தேவதானப்பட்டி, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவில் கடந்த 20 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாதமாக அதன் முழுகொள்ளளவிலேயே உள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் மஞ்சளாறு அணையின் நீர்மட்டமும் முழுகொள்ளளவை எட்டி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
முல்லைபெரியாறு அணையின்நீர்மட்டம் 133.75 அடியாக உள்ளது. வரத்து 1284 கனஅடி, திறப்பு 1000 கனஅடி, இருப்பு 5575 மி.கனஅடி.
வைகை அணையின் நீர்மட்டம் 67.82 அடி, வரத்து 1690 கனஅடி, திறப்பு 2099 கனஅடி, இருப்பு 5208 மி.கனஅடி.
மஞ்சளாறு அணையின்நீர்மட்டம் 55 அடி, வரத்து மற்றும் திறப்பு 100 கனஅடி, சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.60 அடி, வரத்து மற்றும் திறப்பு 142 கனஅடி.
பெரியாறு 16.2, தேக்கடி 13.6, கூடலூர் 8.6, உத்தமபாளையம் 18.4, சண்முகாநதி அணை 7..8, போடி 52.4, வைகை அணை 12, மஞ்சளாறு 46, சோத்துப்பாறை 47, பெரியகுளம் 67, வீரபாண்டி 27.6, அரண்மனைப்புதூர் 12.6, ஆண்டிபட்டி 6.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.