என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சியில் வேங்கைவயல் போல சம்பவம்: நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்ததாக பரபரப்பு

- மனித மலம் என்பது உறுதிப்படுத்தப்பட வில்லை.
- தண்ணீர் ஏற்றப்படாமல் தொட்டி காய வைக்கப்பட்டு உள்ளது.
திருச்சி:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பெரும் பிரச்சனையாகி, இப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் முடிவுக்கு வருவதற்கு முன்பாக வேங்கை வயல் போன்று இன்னொரு சம்பவம் திருச்சி மாநகராட்சி பகுதியில் நடந்திருப்பது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாநகராட்சி 20-வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில், 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
நேற்று மாலை 7 மணி அளவில் இந்த தண்ணீர் தொட்டி மீது ஏறிய மர்ம ஆசாமிகள் சிலர் மர்மப் பொருளை தண்ணீரில் வீசிச் சென்று உள்ளனர். இதை கவனித்த மக்கள் தொட்டியின் மேலே சென்று பாலித்தின் பையில் மிதந்தது மனித மலம் போன்று இருந்தது.
இந்த தகவல் அறிந்த 20-வது வார்டு கவுன்சிலர் எல்.ஐ.சி சங்கர், மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி பணியாளர் கள், தண்ணீரில் கிடந்த கழிவை அகற்றி விட்டு, தொட்டியை முழுமையாக தூய்மைப் படுத்தினர். பின்னர் அப்பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவி விட்டு சென்றனர்.
அவர்கள் தரப்பில் மனித மலம் என்பது உறுதிப்படுத்தப்பட வில்லை. ஆனால் இதுவரை அதில் தண்ணீர் ஏற்றப்படாமல் தொட்டி காய வைக்கப்பட்டு உள்ளது.
இது குடிநீர் அல்லாத மற்ற வீட்டு உபயோகத்துக்கு பயன் படுத்தக்கூடிய தண்ணீர் தொட்டி ஆகும். மலம் கலந்த மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து, திருச்சி மாநகர கோட்டை காவல் நிலைய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.