search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாச்சாத்தி கிராமத்தில்  411 பயனாளிகளுக்கு ரூ.1.71 கோடி  மதிப்பிலான நலத் திட்ட உதவிகள்
    X

    வாச்சாத்தி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை கலெக்டர் சாந்தி வழங்கிய போது எடுத்தபடம்.

    வாச்சாத்தி கிராமத்தில் 411 பயனாளிகளுக்கு ரூ.1.71 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள்

    • பழங்குடியின மக்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை கிடைப்பதற்கான உதவிகளை அனைத்து துறை அரசு அலுவலர்களும் செய்ய வேண்டும்.
    • பதிவு செய்யாதவர்கள் உடனடியாக தங்களது பெயரை பதிவு செய்து கொண்டு, பழங்குடியினர் நலவாரிய அட்டையினை பெற்றுக்கொள்ளலாம்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், பேதாதம்பட்டி ஊராட்சி, வாச்சாத்தி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் சாந்தி பேசியதாவது:-

    மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு அரசு நலத் திட்டங்கள் பெறுவது குறித்து போதிய அளவில் விழிப்புணர்வு இல்லை.

    இதனால், பழங்குடியின மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு நலத் திட்ட உதவிகள் முழுமையாக கிடைப்பதில்லை. எனவே, பழங்குடியின மக்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை கிடைப்பதற்கான உதவிகளை அனைத்து துறை அரசு அலுவலர்களும் செய்ய வேண்டும்.

    பழங்குடியினர் நலத்துறையில் நலவாரிய அட்டையினை பெறுவதற்கு இதுநாள் வரையிலும் பதிவு செய்யாதவர்கள் உடனடியாக தங்களது பெயரை பதிவு செய்து கொண்டு, பழங்குடியினர் நலவாரிய அட்டையினை பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த அட்டை இருந்தால் இயற்கை மற்றும் விபத்து மரணம், ஈமச்சடங்கு நிதியுதவி உள்ளிட்ட அரசு நலத் திட்ட உதவிகள் கிடைக்கும். எனவே, உரிய ஆவணங்களுடன் அரசு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்காக மலைவாழ் பழங்குடியின மக்கள் விண்ணப்பிக்கலாம் என்றார்.

    தொடர்ந்து, புதிய குடும்ப அட்டைகள், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, சொட்டு நீர் பாசன கருவிகள், மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் உள்பட 411 பயனாளிகளுக்கு ரூ. 1.71 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    இந்த முகாமில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ராஜசேகரன், ஒன்றியக்குழுத் தலைவர் பொன்மலர் பசுபதி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சங்கீதா ராமச்சந்திரன், பேதாதம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாரதிராஜா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவிதா, வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் மாலினி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் சி.சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×