என் மலர்
உள்ளூர் செய்திகள்
நிலவு, சூரியனை நோக்கிய பணிகள் ஜூலையில் தொடக்கம்- இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
- இந்தியாவின் நிலவு ஆய்வு திட்டமான சந்திரயான், இஸ்ரோவின் தொடர்ச்சியான விண்வெளி பயணமாகும்.
- ஆதித்யா-எல்1 என்பது சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் அறிவியல் பணியும் தொடங்கப்படுகிறது.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து உள்நாடு மற்றும் வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைகோள்களையும் விண்ணில் வெற்றிகரமாக ஏவி வருகிறது.
இதனுடன் நிலவு மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்கான பணிகளிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வருகிற ஜூலை மாதம் சூரியன் மற்றும் நிலவை நோக்கிய பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட உள்ளது.
இந்தியாவின் நிலவு ஆய்வு திட்டமான சந்திரயான், இஸ்ரோவின் தொடர்ச்சியான விண்வெளி பயணமாகும். முதல் நிலவு ராக்கெட், சந்திரயான்-1, 2008-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, சந்திரயான்-2 வெற்றிகரமாக 2019-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டு நிலவின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
ஆனால் அதில் பொருத்தப்பட்டிருந்த ஆராய்ச்சிக்கான லேண்டர் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி அன்று தரையிறங்க முயன்றபோது, மென்பொருள் கோளாறால் அதன் பாதையில் இருந்து விலகி சந்திரனில் வேகமாக தரையிறங்கி சேதம் அடைந்தது. தொடர்ந்து, சந்திரயான் 3-ஐ வருகிற ஜூலை மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆதித்யா-எல்1 என்பது சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் அறிவியல் பணியும் தொடங்கப்படுகிறது. சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா-எல்1 என்ற விண்கலத்தையும் தொடர்ந்து விண்ணில் செலுத்த இலக்கு வைத்துள்ளோம். இந்த பணியானது 400 கிலோ எடையுள்ள 'விஇஎல்சி' என்ற ஒரு கருவியை சுமந்து செல்லும் ஆதித்யா-1 என்ற செயற்கைகோள் 800 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து சோதனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக முடித்து வருகிறோம்.
சூரியன்-பூமி அமைப்பின் முதல் 'லாக்ராஞ்சியன்' என்ற புள்ளியை (எல்1) சுற்றி ஒளிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைகோள், சூரியனை எந்த மறைவு அல்லது கிரகணமும் இல்லாமல் தொடர்ந்து பார்க்கும் வசதியை ஏற்படுத்தும். ஆதித்யா-1 பணிக்கு ஆதித்யா-எல்1 என பெயர் மாற்றப்பட்டது. பூமியில் இருந்து சூரியனை நோக்கி 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்1 புள்ளியைச் சுற்றி ஒரு சுற்றுப்பாதையில் இது நிலை நிறுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.