search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயிலில் சோலார் பேனல் மூலம் இயங்கும் இ-சைக்கிளை உருவாக்கிய தண்டனை கைதி
    X

    ஜெயிலில் சோலார் பேனல் மூலம் இயங்கும் இ-சைக்கிளை உருவாக்கிய தண்டனை கைதி

    • இ-சைக்கிள் 3 விதமாக இயங்கும் வகையில் யுகஆதித்தன் உருவாக்கி இருக்கிறார்.
    • இ-சைக்கிளை ஜெயில் வார்டன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    கோவை:

    ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கவுந்தபாடியை சேர்ந்தவர் யுகஆதித்தன் (வயது 31). இவர் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார்.

    யுகஆதித்தன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டம் அழகாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    யுகஆதித்தன் ஜெயிலில் இருந்தபடியே தான் படித்த கல்வியை பயனுள்ளதாக்கும் வகையில் இ-சைக்கிள் ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த இ-சைக்கிள் 3 விதமாக இயங்கும் வகையில் அவர் உருவாக்கி இருக்கிறார். இந்த சைக்கிளை சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் பெறும் சோலார் பேனல் மூலம் இயக்கலாம். அல்லது சைக்கிளை மிதிக்கும்போது டைனமோவில் இருந்து வரும் மின்சாரத்தை கொண்டு இயக்கலாம். 3-வது பேட்டரியில் சார்ஜ் ஏற்றிக்கொண்டும் ஓட்டலாம். தற்போது இந்த இ-சைக்கிளை ஜெயில் வார்டன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கோவை மத்திய ஜெயில்துறை டி.ஐ.ஜி. சண்முக சுந்தரம் கூறியதாவது:-

    யுகஆதித்தன் ஜெயில் வளாகத்துக்குள் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என முயற்சி மேற்கொண்டார். பயன்படுத்தாமல் கிடந்த சைக்கிளை பார்த்த அவர் அதனை சூரிய ஒளி மற்றும் பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைத்து உள்ளார். சைக்கிளில் நடுவில் தகடுகளை வைத்து அங்கு பேட்டரியை பொருத்தினார். மேலும் பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக டைனமோவையும் பொருத்தினார். சைக்கிளை மிதிக்கும்போது டைனமோ மூலமாக பேட்டரி சார்ஜ் ஏறும் வகையில் வடிவமைத்தார். மின்சாரம் மூலமாகவும் பேட்டரியை சார்ஜ் செய்யலாம். கேரியரில் சோலார் பேனலை பொருத்தி அதன் மூலமாகவும் சைக்கிள் இயங்கும் வகையிலும் வடிவமைத்து உள்ளார். மிலிட்டரி பச்சை நிறத்தில் பெயிண்ட் அடித்து எங்களிடம் வழங்கினார். யுகஆதித்தனை நாங்கள் வெகுவாக பாராட்டினோம். இந்த சைக்கிளை தற்போது டவர் பிளாக்கில் ரோந்து செல்லும் வார்டன்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இதுபோல 9 சைக்கிளை தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம்.

    தற்போது யுக ஆதித்தன் இ-ஆட்டோ ரிக்ஷாவை தயாரிக்கிறார். ஓரிரு மாதங்களில் இந்த பணி முடிவடையும். அதன் பின்னர் மின்சார ஆட்டோவை ஜெயில் வளாகத்தில் ரோந்து பணியில் பயன்படுத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் கோவை மத்திய ஜெயிலில் கைதிகள் பணிபுரியும் நெசவு பிரிவு, பெட்ரோல் பங்க், தையல் பிரிவு, புத்தகம் பைண்டிங் பிரிவு, வெல்டிங் பிரிவு, தச்சுப்பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகிறது. காந்திபுரத்தில் உள்ள சிறைச்சாலை பஜாரில் பேக்கரி, நர்சரி கார்டன், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை ஜெயில் நிர்வாகம் நடத்தி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான தண்டனை கைதிகள் வேலை பார்த்து வருகின்றனர்.

    Next Story
    ×