என் மலர்
உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்ற காட்சி.
காளியம்மன் கோவில் தேரோட்ட விழா

- பக்தர்கள் பங்களிப்போடு, பல லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டது.
- பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு, அலங்கரிக்கப்பட்டிருந்த காளியம்மன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரியகுளம் அருகே சீராம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக இக்கோவிலின் தேர் சிதிலமடைந்த தேரோட்டம் இல்லாமல் இருந்து வந்தது. பக்தர்களின் வேண்டுகோளை அடுத்து இந்துசமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் பங்களிப்போடு, பல லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு செங்காளி அம்மன் கோவில் திருவிழா கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சீராம்பட்டி காளியம்மன் விழாவும் தொடங்கியது.
காளியம்மன் கோவில் புதிய தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி கடந்த 22-ம் தேதி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பால்குடம், மாவிளக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று மாலை 4 மணிக்கு 18 ஆண்டுகளுக்கு பின், காளியம்மன் தேரோட்ட விழா பம்பை, தாரை தப்பட்டை, வாத்தியங்கள் முழங்க வானவேடிக்கையுடன் வெகுவிமர்சியாக தேரோட்டம் நடந்தது.
இந்த தேரோட்டத்தில் சீராம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான சவுளுப்பட்டி, கொண்டம்பட்டி, கார்த்தானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு, அலங்கரிக்கப்பட்டிருந்த காளியம்மன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறையினர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், விழாக்குழு வினர், பக்தர்கள் செய்திருந்தனர்.