என் மலர்
தமிழ்நாடு
சின்னசேலம் கலவரம்- கைதான 350 பேரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவு
- மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர், உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
- கலவரம் நடந்த பகுதிக்கு போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்திமெட்ரிக் மேல்நிலைபள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு பல்வேறு அமைப்பினர் கனியாமூர் பகுதியில் திரண்டு போராட்டம் செய்தனர்.
இந்த போராட்டம் சிறிது நேரத்தில் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் பள்ளியின் பஸ்கள், போலீஸ் ஜீப்கள் எரிக்கப்பட்டன. நிலைமை தொடர்ந்து மோசமாகவே போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். இதைதொடர்ந்து போராட்டகாரர்கள் சிதறி ஓடினார்கள். அப்போதும் கலவரம் ஓயவில்லை.
உடனடியாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்படி கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. கலவரம் நடந்த பகுதிக்கு போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
இதன் விளைவாக கைது படலம் தொடங்கியது. கடந்த 2 நாட்களில் மட்டும் 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது 14 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 350 பேரும் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனை விசாரித்த நீதிபதிகள் 350 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இவர்களில் 22 பேர் சிறார்கள் ஆவர். சிறார்களை கடலூர் சீர்திருத்த பள்ளியிலும், மற்றவர்கள் திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.