என் மலர்
உள்ளூர் செய்திகள்
பாலவாடியில் கரகசெல்லியம்மன், பட்டாளம்மன், கங்காதேவர் கோவில் திருவிழா
- முன்னோர்கள் கடைபிடித்த அதே பாரம்பரிய சம்பிரதாய நிகழ்வினை தொடர்ந்து கிராம மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
- புது மணப்பெண் மணமகன் போல மாலை அணிந்து மணக்கோலத்தில் சீர்வரிசையுடன் அம்மனை வந்து வழிபட்டனர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாலவாடி கிராமத்தில் கரகசெல்லியம்மன், பட்டாளம்மன், கங்காதேவர் கோவில்கள் உள்ளது.
இக்கோவில் திருவிழா 17 ஆண்டுகளுக்கு பின் கடந்த மே 23-ஆம் தேதி மண்டு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.
பாலவாடி பெரிய நோன்பு திருவிழாவில், கானாப்பட்டி குரும்பர் பலகை அழைத்தலும், வீரபத்திரன் சுவாமி பூஜை பலகை அழைத்தல் நிகழ்ச்சி மற்றும் 15 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொண்ட மாவிளக்கு ஊர்வலம் எடுத்து வந்தனர்.
இதில் முக்கிய நிகழ்வாக திருமணமான கணவன் மனைவி திருவிழா நடைபெறும் முக்கிய நிகழ்வு நாளில் மணக்கோலத்தில் சீர்வரிசையுடன் தலையில் மாவிளக்கு சுமந்து புதுமணத் தம்பதி போலவே அம்மனை வந்து வழிபடும் பாரம்பரியமான நிகழ்வு இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதில் திருமணம் ஆகி குழந்தையுடன் உள்ள தம்பதியினராக இருந்தாலும் திருவிழா அன்று புது மணப்பெண் மணமகன் போல மாலை அணிந்து மணக்கோலத்தில் புது தாலி கட்டியும், மெட்டி அணிவித்து தாய் வீட்டாரின் சீர்வரிசையுடன் அம்மனை வந்து வழிபட்டு செல்லும் பாரம்பரியமான வழிபாட்டு முறைகளும் நடைபெற்றது.
17 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறும் திருவிழா இருந்தாலும் முன்னோர்கள் கடைபிடித்த அதே பாரம்பரிய சம்பிரதாய நிகழ்வினை தொடர்ந்து கிராம மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.