என் மலர்
உள்ளூர் செய்திகள்
கரூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-எஸ்.பி. சுந்தரவதனம் எச்சரிக்கை
- கரூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்
- கரூர் மாநகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
கரூர்,
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கரூரில் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாரியம்மன் கோவிலுக்கு பூத்தட்டு ஊர்வலமாக சென்ற போது அதில் கலந்து கொண்ட அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஊர்வலத்தின் முன் குடிபோதையில் காவல் துறையினரிடம் தகராறு செய்தும், அந்த வழியாக அரசு வாகனம் மற்றும் வாகனத்தில் வந்த பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டும் மேலும் வாகனத்தையும் சேதப்படுத்தி உள்ளனர்.பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கரூர் மாநகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். அதன் மூலம் கரூர் மாவட்ட அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.இந்த குற்றச்சம்பவம் தொடர்பாக கரூர் நகரப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.கரூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்கள், பெண்கள் மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்து அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.