என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சி, சேலம் பயணிகள் ரெயில் இன்று முதல் மீண்டும் இயக்கம் - குளித்தலை ரெயில் நிலையத்தில் பொது மக்கள் உற்சாக வரவேற்பு

- கொரோனா பெருந்தொற்று காலங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இந்த ரெயில் சேவை தொடர பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
- அதன்படி இன்று முதல் குளித்தலை வழியாக திருச்சி முதல் ஈரோடு செல்லும் ெரயில்களும், கரூர் முதல் சேலம் செல்லும் இரண்டு ெரயில்களின் சேவைகள் தொடங்கின.
கரூர்:
கரூர் மாவட்டம் குளித்தலை வழியாக திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் ஆறுரெயில்களும், கரூரில் இருந்து சேலம் செல்லும் இரண்டு ரெயில்களும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்படாமல் இருந்தது. கொரோனா பெருந்தொற்று காலங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இந்த ரெயில் சேவை தொடர பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் கொரோனா தொற்று முடிந்து கட்டுக்குள் வந்த பிறகும் ரெயில்களை இயக்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. குளித்தலை நகர மக்கள் இயக்கத்தின் சார்பாகவும் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் பல்வேறு கோரிக்கைகளை ரெயில்வே நிர்வாகத்திற்கும், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தருக்கும், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கத்திற்கும் வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அதற்கு கைமேல் பலனாக நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இன்று முதல் குளித்தலை வழியாக திருச்சி முதல் ஈரோடு செல்லும் ரெயில்களும், கரூர் முதல் சேலம் செல்லும் இரண்டு ரெயில்களின் சேவைகள் தொடங்கின.
இதற்கு குளித்தலை நகர மக்கள் இயக்கத்தினர் பெரும் முயற்சி எடுத்து குளித்தலை வழியாக ரயில் செல்வதற்கு உறுதுணையாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் எம்.பி.க்கும், குளித்தலை எம்.எல்.ஏ. இரா.மாணிக்கத்திற்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இன்று காலை குளித்தலை ரெயில் நிலையத்திற்கு வந்த ெரயில் பயணிகளிடமும், பொதுமக்களிடமும் குளித்தலை நகர மக்கள் இயக்கத்தினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.