search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளையாட்டு போட்டி முடிந்து வீடு திரும்பிய பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்
    X

    விளையாட்டு போட்டி முடிந்து வீடு திரும்பிய பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்

    • மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
    • பைசல்கான் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    தக்கலை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலருடன் இருந்த குமரி மாவட்ட மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தகவலுடன் கூடிய எப்.ஐ.ஆர். வெளியான சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனை கண்டித்து அரசியல் கட்சிகள் போராட்டத்தில் இறங்கி உள்ளன. சென்னை ஐகோர்ட்டும் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் குமரி மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வெளிமாவட்டத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்று விட்டு திரும்பிய அவர், இயற்கை உபாதை கழிக்க சென்ற போது இந்த சம்பவம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

    தக்கலை சேர்ந்த தொழிலாளிக்கு 2 மகள்கள் உள்ளனர். தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் அவரது இளைய மகள், கைப்பந்து விளையாட்டில் பங்கு பெற்று வந்துள்ளார். கடந்த 25-ந் தேதி இவர், உடற்பயிற்சி ஆசிரியை மற்றும் 14 மாணவிகளுடன் கைப்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்க திருச்சி மாவட்டம் சென்றார்.

    போட்டி முடிந்ததும் அவர்கள் இரவு 9 மணியளவில் குமரி மாவட்டம் திரும்பி உள்ளனர். சக மாணவிகள் வீட்டுக்கு புறப்பட்டுச் செல்ல தொழிலாளியின் மகள் மட்டும் தனது தந்தை வருகைக்காக காத்திருந்துள்ளார். அப்போது இயற்கை உபாதையால் அவதிப்பட்ட அவர், அதற்காக இடம் தேடியுள்ளார்.

    அந்த நேரத்தில் அங்கு அதேபகுதியை சேர்ந்த பைசல்கான் (வயது 37) என்பவர் வந்துள்ளார். அவர், மாணவியிடம் நைசாக பேசி உதவி செய்வது போல் நடித்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவி கழிவறை சென்று வந்ததும், அவரை வீட்டின் அறையில் அடைத்து வைத்து பைசல்கான் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

    இந்நிலையில், பைசல்கான் பிடியில் இருந்து தப்பி மாணவி தனது வீட்டிற்கு வந்தார். அவரின் நிலையை பார்த்து பெற்றோர் பதறினர். அப்போது, மாணவி தனக்கு நடந்த பாலியல் கொடுமையை கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்துள்ளனர்.

    மேலும் பைசல்கான் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×