என் மலர்
உள்ளூர் செய்திகள்
பல்லாங்குழிபோல் மாறியது- கொருக்குப்பேட்டை சர்வீஸ் சாலையில் செல்ல அச்சப்படும் வாகன ஓட்டிகள்
- மழை பெய்யும் போது இந்த சாலை படுமோசமாக மாறி விடுகிறது.
- தினந்தோறும் வாகன ஓட்டிகள் அவ்வழியே சாகச பயணம் செய்து வருகின்றனர்.
ராயபுரம்:
கொருக்குப்பேட்டை எழில் நகர் அருகே ரெயில்வே தண்டவாளம் உள்ளது. இதைச் சுற்றி எழில் நகர், எம்.ஜி.ஆர்.நகர், கார்நேசன் நகர், குமரன் நகர், அஜீஸ் நகர், சந்திரசேகர் நகர், கருமாரியம்மன் நகர் உள்ளிட்ட தெருக்கள் உள்ளன. இங்கு ரெயில் போக்குவரத்துக்காக தினமும் 20 முறைக்கு மேல் ரெயில்வேகேட் மூடப்படுவது வழக்கம். அப்போது வாகனத்தில் செல்பவர்கள் சுமார் அரை மணி நேரம் வரை காத்திருந்து சென்று வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சிரமம் இன்றி ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல எழில் நகரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2023-ம் தொடங்கப்பட்டு தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.
மேம்பாலப்பணி நடந்து வரும் நிலையில் அதன் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலைகள் குண்டும் குழியுமாக சேதமடைந்து உள்ளன. சமீபத்தில் பெய்த மழையால் சாலை முழுவதும் பல்லாங்குழிபோல் காட்சி அளிக்கின்றன. மழை பெய்யும் போது இந்த சாலை படுமோசமாக மாறி விடுகிறது.
இதனால் சர்வீஸ்சாலையில் வாகனத்தில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தினந்தோறும் வாகன ஓட்டிகள் அவ்வழியே சாகச பயணம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, கொருக்குப்பேட்டை சர்வீஸ் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளங்கள் எங்கு உள்ளது என்பது தெரியாமல் திணறியபடி ஓட்டி செல்கிறார்கள். இதனால் அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சேதம் அடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்றனர்.