என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் 500 டன் காய்கறிகள் விற்பனை ஆகாமல் தேக்கம்
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை பரவலாக நீடித்தது.
- காய்கறி விற்பனை மந்தம் காரணமாக அதிக அளவில் காய்கறிகள் தேக்கமடைந்தன.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று தக்காளி 60 லாரிகள் உட்பட 450 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து இருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை பரவலாக நீடித்தது.
இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
காய்கறி விற்பனை மந்தம் காரணமாக அதிக அளவில் காய்கறிகள் தேக்கமடைந்தன. சுமார் 500 டன் காய்கறிகள் மூட்டை மூட்டையாக விற்பனை ஆகாமல் குவிந்து கிடந்தது. குறிப்பாக தக்காளி, முட்டைகோஸ், முள்ளங்கி, சவ்சவ் உள்ளிட்டவை அதிகம் தேங்கியது. இது மொத்த வியாபாரிகளை பெரிதும் கவலை அடைய செய்து உள்ளது.
இதுகுறித்து மொத்த வியாபாரி சுகுமார் கூறும்போது, நள்ளிரவில் பெய்த மழை மற்றும் பண்டிகை விடுமுறை காரணமாக சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து பாதியாக குறைந்து விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 500 டன் காய்கறிகள் தேங்கி கிடக்கின்றன என்றார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை (கிலோவில்) வருமாறு :-
தக்காளி-ரூ.13, நாசிக் வெங்காயம்-ரூ.30, ஆந்திரா வெங்காயம்-ரூ.20, சின்ன வெங்காயம்-ரூ.90, உருளைக்கிழங்கு-ரூ.20, உஜாலா கத்தரிக்காய்-ரூ.30, வரி கத்தரிக்காய்-ரூ.20, அவரைக்காய்-ரூ.50, வெண்டைக்காய்-ரூ.40, கோவக்காய்-ரூ.35, பீன்ஸ்-ரூ.40, ஊட்டி கேரட்-ரூ.25, பீட்ரூட்-ரூ.16, முருங்கைக்காய்-ரூ.120, முட்டைகோஸ்-ரூ.6, சவ்சவ்-ரூ.6, முள்ளங்கி-ரூ.12, நூக்கல்-ரூ.25, காலி பிளவர் ஒன்று-ரூ.15, பீர்க்கங்காய்-ரூ.50, பன்னீர் பாகற்காய்-ரூ.40, புடலங்காய்-ரூ.20.