என் மலர்
உள்ளூர் செய்திகள்
மாதவரம் மெட்ரோ ரெயில் பணிமனை பணிகள் 2024-ம் ஆண்டுக்குள் முடியும்: மெட்ரோ ரெயில் நிர்வாகம் தகவல்
- மொத்தம் 49 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
- 110 மெட்ரோ ரெயில்கள் நிறுத்தும் வகையில் பணிமனை அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை :
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், மாதவரம்-சிறுசேரி வழித்தடத்தில் 19.1 கிலோ மீட்டர் தொலைவு உயர்நிலைப் பாதையாகவும், 26.7 கிலோ மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையாகவும் அமையவுள்ளது. மொத்தம் 49 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதில் மாதவரத்தில் 48.89 ஏக்கர் பரப்பளவில் ரூ.289 கோடியே 51 லட்சம் மதிப்பில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் 3 பெட்டிகள் கொண்ட ஒரு மெட்ரோ ரெயில் என்ற அடிப்படையில் 110 மெட்ரோ ரெயில்கள் நிறுத்தும் வகையில் பணிமனை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிமனையில் 24 ரெயில் நிறுத்த பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர 1.4 கிலோ மீட்டர் சோதனை ஓட்டத்திற்கான இருப்பு பாதையும் அமைக்கப்பட உள்ளது. மெட்ரோ ரெயில்களை பராமரிக்கவும், சுத்தம் செய்யவும், தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த பணிமனை வடிவமைக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் வழித்தடம் 3 மற்றும் 5-ல் இயக்கப்பட உள்ள மெட்ரோ ரெயில்களுக்கான பணிமனையாக மாதவரம் பணிமனை செயல்பட உள்ளது. இந்த பணிமனை அமைக்கும் பணிகளை 2024-ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் மாதவரம் மெட்ரோ ெரயில் பணிமனையில் நடைபெற்று வரும் பணிகளை நேற்று பார்வையிட்டார். அப்போது, மெட்ரோ ரெயில் நிறுவன திட்ட இயக்குனர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் பி.எஸ்.சீனிவாஸ் மற்றும் அதிகாரிகள் பலர் இருந்தனர்.