என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வீடுகளின் கதவை உடைத்து திருட முயன்ற முகமூடி கொள்ளையர்கள் கைது
    X

    மதுரையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வீடுகளின் கதவை உடைத்து திருட முயன்ற முகமூடி கொள்ளையர்கள் கைது

    • அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டின் கதவை ஆயுதங்களால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
    • நாகமலை புதுக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ளது ராம்கோ நகர் பகுதி. வளர்ந்து வரும் இப்பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம், திருமண மண்டபம், தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளது.

    திண்டுக்கல்-விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியாக உள்ள ராம்கோ நகரில் 100-க்கும் மேற்பட்ட தனித்தனி வீடுகள் கட்டப்பட்டு பொது மக்கள் வசித்து வருகின்றனர். வீடுகள் தனித்தனியே இருப்பதால் ஆட்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 5-ந்தேதி நள்ளிரவு நேரத்தில் ராம்கோ நகர் பகுதியில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 2 பேர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தனியாக உள்ள வீடுகளை நோட்ட மிட்டனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டின் கதவை ஆயுதங்களால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

    அதனை தொடர்ந்து மற்றொரு வீட்டின் கதவை அரிவாளால் வெட்டி திறக்க முயற்சித்தனர். சத்தம் கேட்டு எழுந்த அந்த வீட்டின் உரிமையாளர் வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் பார்த்தபோது முகமூடி அணிந்த 2 பேர் கதவை உடைப்பது தெரியவந்தது.

    உடனே அவர் நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு செல்போனில் தகவல் கொடுத்தார். போலீசார் சிறிதும் தாமதிக்காமல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸ் வருவதை அறிந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது டவுசர் அணிந்த 2 மர்ம நபர்கள் தலையில் குரங்கு குல்லாவுடன் கதவை ஆயுதங்களால் உடைப்பது பதிவாகி இருந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர். குற்றப்பிரிவு போலீசார் துணையுடன் சம்பவம் நடந்தபோது அப்பகுதியில் பதிவான செல்போன் அழைப்பு உள்ளிட்ட விவரங்களை வைத்து கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து இதில் தொடர்புடையதாக ஈரோடு மாவட்டம் பனையம்பள்ளியை சேர்ந்த மாரியப்பன் மகன் சிவா (வயது 39), சிவகங்கை மாவட்டம் சக்கந்தியை சேர்ந்த முனியன் மகன் மருதுபாண்டி (35) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×