என் மலர்
உள்ளூர் செய்திகள்
மரக்காணம் போலீஸ் நிலைத்தை தி.மு.க. பிரமுகர் தலைமையில் கூனிமேடு கிராம மக்கள் முற்றுகை
- 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து பணிகளை ஏன் நிறுத்துகிறாய் என்று குமார், ரமேஷிடம் கேட்டனர்.
- இதையடுத்து அவரிடம் புகார் மனு கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விழுப்புரம்:
மரக்காணம் அடுத்த கூனிமேட்டில் பழைமை வாய்ந்த பொன்னியம்மன் கோவில் உள்ளது. சுற்று வட்டார கிராமங்களில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குலதெய்வமாக பொன்னியம்மன் உள்ளது. பாதுகாப்பு கருதி கோவிலை சுற்றிலும் மதிர்சுவர் அமைக்க கிராம மக்கள் முடிவெடுத்து பணிகளை தொடங்கினர். இந்நிலையில் கோவிலின் அருகில் குடியிருக்கும் குமார், ரமேஷ் ஆகியோர் மதில் சுவர் கட்டுமான பணிகளை தடுத்து, கட்டுமான பணி செய்த ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். தகவல் அறிந்து தி.மு.க. பிரமுகர் பெருமாள் அங்கு விரைந்து வந்தார். அவருடன் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து பணிகளை ஏன் நிறுத்துகிறாய் என்று குமார், ரமேஷிடம் கேட்டனர். கோவிலுக்குள் சென்று வருவதற்கு 2 வழிகள் வைக்க வேண்டும். இல்லை என்றால் மதில் சுவர் கட்டவே கூடாது என்று கூறினார்கள். கோவிலின் பாதுகாப்பிற்காகவே மதில் சுவர் அமைக்கப்படுகிறது.
எனவே, ஒரு வழியே போதும் என்று பொதுமக்களும், தி.மு.க. பிரமுகர் பெருமாளும் அவர்களிடம் கூறினார்கள். இதில் சமாதானம் அடையாத குமார், ரமேஷ் ஆகிய 2 பேரும் தி.மு.க. பிரமுகர் பெருமாளை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். 2 வழி வைக்கவில்லை என்றால் மதில் சுவர் கட்டக்கூடாது. மீறி கட்டினால் உங்கள் அனைவரையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி, அங்கு பணி செய்த கட்டுமான ஊழியர்களை விரட்டினர். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள், தி.மு.க. பிரமுகர் பெருமாள் தலைமையில் மரக்காணம் போலீஸ் நிலையம் சென்றனர். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து புகாரளிக்க அனுமதி கேட்டனர். கள்ளச்சாராய வழக்கு விசாரணைக்கு அவர் சென்றுள்ளதாக பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர்.
இதனை அடுத்து தி.மு.க. பிரமுகர் பெருமாள் மரக்காணம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு இங்கு வரவேண்டுமென கோஷம் எழுப்பினார். உடனடியாக அங்கு வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தி.மு.க. பிரமுகர் பெருமாள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தங்களின் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நாளை துணை போலீஸ் சூப்பிரண்டு கூனிமேட்டிற்கு வந்து நேரில் விசாரணை நடத்துவார் என்று கூறினார். இதையடுத்து அவரிடம் புகார் மனு கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். தி.மு.க. பிரமுகர் பெருமாள், கூனிமேடு கிராம மக்களுடன் சேந்து மரக்காணம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.