என் மலர்
உள்ளூர் செய்திகள்
சிற்பி வீட்டில் பூட்டை உடைத்து 27 பவுன் நகை-ரூ.80 ஆயிரம் ரொக்கம் கொள்ளை
- கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
- போலீசார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவை கைப்பற்றி, அதில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள சாயாவனம் மெயின் ரோடு அருகே வசிப்பவர் பழனிவேல் (வயது 45). இவர் கோவில் சிற்பம் மற்றும் சுதை வேலைகள் செய்து வருகிறார்.
இந்த நிலையில் பழனிவேல் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு நேற்று மதியம் புறப்பட்டார். பின்னர், தரிசனம் முடித்து விட்டு இரவு 11 மணி அளவில் அனைவரும் ஊர் திரும்பி உள்ளனர். அப்போது பழனிவேல் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பழனிவேல் வீட்டில் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது உள்ளே அறையின் மரக்கதவையும் மர்மநபர்கள் உடைத்திருந்தது தெரியவந்தது. இதனால் மேலும் திடுக்கிட்ட பழனிவேல் அறையின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைக்காமல் அதில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 27 பவுன் நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. நகை, பணத்தை பறிகொடுத்த பழனிவேல் வேதனையில் துடித்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து அவர் பூம்புகார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையில் பூம்புகார் இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார் நள்ளிரவு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவின் சாவியை தேடிப்பிடித்து, அதில் வைக்கப்பட்டிருந்த நகை-பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
இதனால் விசாரணையை துரிதப்படுத்திய போலீசார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவை கைப்பற்றி, அதில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் மர்ம நபர்கள் குறித்து தடயங்கள் கிடைக்கின்றதா? என விசாரணை நடைபெற்று வருகிறது.
இதேபோல், கடந்த வாரம் திருவெண்காடு அடுத்துள்ள மங்கைமடம் கிராமத்தில் ஒருவரது வீட்டில் சுமார் 125 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை நடத்துள்ள நிலையில், அதன் அருகில் சில கி.மீட்டர் தொலைவில் மற்றொரு வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.