என் மலர்
உள்ளூர் செய்திகள்

அயனாவரத்தில் இந்த மாதம் சுரங்க பணி தொடக்கம்
- 2 எந்திரங்கள் மூலம் அயனாவரத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
- துளையிடும் எந்திரத்தால் ஏற்படும் அதிர்வு காரணமாக பழமையான கட்டிடங்கள் சேதம் அடையலாம்.
சென்னை:
மாதவரம்-பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 2 துளையிடும் எந்திரங்கள் மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கியது.
இந்த மாத இறுதியில் மேலும் 2 எந்திரங்கள் மூலம் அயனாவரத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
அயனாவரத்தில் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் 30 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த இடங்கள் மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான நீளத்தின் ஒரு பகுதியாகும்.
அங்கு மொத்தம் 7 துளையிடும் எந்திரங்கள் மூலம் 2 ஆண்டுகளில் 9 கி.மீ. தூரத்துக்கு இரட்டை சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "மாதவரம்-கெல்லீஸ் இடையே மணல் பகுதி, மென்மையான பாறை, கடினமான பாறை ஆகியவை கலந்துள்ளன. அதற்கு ஏற்ப கட்டர்களுடன் கூடிய துளையிடும் எந்திரங்கள் வேகமான கட்டுமானத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த எந்திரங்கள் மூலம் ஒரு நாளைக்கு 7 மீட்டர் முதல் 11 மீட்டர் வரை துளையிட முடியும். மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் சுரங்கப்பாதை அமைப்பது சவாலானது. 30 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை அமைப்பதால் துளையிடும் எந்திரத்தால் ஏற்படும் அதிர்வு காரணமாக பழமையான கட்டிடங்கள் சேதம் அடையலாம். எனவே அதன் கட்டமைப்புகளை கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மாதவரம்-கெல்லீஸ் இடையே 207 குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மாதவரம் பால்பண்ணை, முராரி மருத்துவமனை, அயனாவரம், புரசைவாக்கம் நெடுஞ்சாலை ஆகிய ரெயில் நிலையங்களில் உள்நுழைவு, வெளியேறும் கட்டமைப்புகள் அமைக்கப்படும்" என்றனர்.