search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பதிவு செய்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம்- அமைச்சர் செந்தில் பாலாஜி
    X

    (கோப்பு படம்)

    பதிவு செய்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம்- அமைச்சர் செந்தில் பாலாஜி

    • 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் பணி நவம்பர் 11-ந் தேதி தொடங்குகிறது.
    • 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

    கரூரில் வருகிற 11-ந் தேதி 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது:

    பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி வழங்கியிருந்தது. சட்டபேரவையில வெளியிடப்பட்ட அறிவிப்புகளை நிறைவேற்றும் வகையில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் இலவச மின்சாரத்திற்கு பதிவு செய்திருந்து காத்திருந்தனர்.

    அதில் முதல் ஆண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் பணிகள் அரவகுறிச்சியில் உள்ள தடாகம் பகுதியில் நவம்பர் 11-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

    மேலும் கரூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 20 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பிற்கான ஆணைகள் வழங்கப்படும். பதிவு செய்யப்பட்டு காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் படிப்படியாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×