search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரு பெண்ணுக்கு இருவர் போட்டி- கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற தொழிலாளி
    X

    ஒரு பெண்ணுக்கு இருவர் போட்டி- கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற தொழிலாளி

    • முன்விரோதத்தில் தான் மோகனை கத்தியால் குத்தி ஷாஜி கொலை செய்துள்ளார்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி ஒழுகினசேரி கன்னிமார் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 54), சரக்கு ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மதியம் வடசேரி எம்.எஸ்.ரோடு பகுதியில் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு லோடுமேன் நாவல்காடு ஷாஜி (28) அங்கு வந்தார். அவர், மோகனிடம் ஏதோ பேச அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஷாஜி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மோகனின் வயிறு, மார்பு, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.

    பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த பலரும் அலறியடித்து ஓடினர். இதற்கிடையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்த மோகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு லலித்குமார், வடசேரி இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

    அவர்கள் மோகன் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதற்கிடையில் கொலை செயலில் ஈடுபட்டு விட்டு தப்பி ஓடிய ஷாஜி, நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்ததாக குறிப்பிட்டார்.

    ஆனால் அவரது பதிலில் சந்தேகம் அடைந்த போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு துருவித் துருவி விசாரணை நடத்தினர். இதில் பெண் விவகாரத்தில் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவ தாவது:-

    கொலை செய்யப்பட்ட மோகனின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்றில் இறந்து விட்டார். மகள், நெல்லையில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மகன் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதனால் மகனுடன் வசித்து வந்த மோகனுக்கு, அதே பகுதியை சேர்ந்த பர்னிச்சர் கடையில் வேலை பார்க்கும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    அந்தப் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அந்தப் பெண்ணிற்கு மோகன், பல்வேறு உதவிகளும் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பர்னிச்சர் கடையின் அருகே உள்ள இரும்புக் கடையில் லோடு மேனாக வேலை செய்த ஷாஜியுடன் அந்தப் பெண்ணிற்கு தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதனை மோகன் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அந்தப் பெண் ஷாஜியிடம் தெரிவித்துள்ளார். அவர் மோகனிடம் சென்று பேசியதில் இருவருக்கும் விரோதம் ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் தான் நேற்று மோகனை கத்தியால் குத்தி ஷாஜி கொலை செய்துள்ளார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது தூண்டுதலின் பேரில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×