என் மலர்
உள்ளூர் செய்திகள்
சட்டக்கல்லூரி மாணவர் கொலையில் முக்கிய கொலையாளி கைது
- மாயாண்டி தடுமாறி கீழே விழுந்தார்.
- கூட்டாளிகள் மேலும் 3 பேரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி கீழ நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் மணிகண்டன் (வயது 22). இவர் சென்னையில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர் நேற்று முன்தினம் வயலுக்கு சென்று விட்டு திரும்பிய போது சேரன்மகாதேவி லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த மாயாண்டி(46) மற்றும் அவரது கூட்டாளிகளான அம்பை அருகே உள்ள கோடாரங்குளத்தை சேர்நத 3 பேர் சேர்ந்து மணிகண்டனை கத்தியால் சரமாரி குத்திக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தியதில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வி.கே.புரம் அருகே உள்ள கோட்டாரங்குளத்தில் சிவராமன்(25) என்பவர் கொலை செய்யப்பட்டார். அதில் மணிகண்டனின் நெருங்கிய உறவினருக்கு தொடர்பு இருந்ததாக நினைத்து, அதற்கு பழி தீர்க்கும் விதமாக சிவராமனின் தாய்மாமாவான மாயாண்டி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். நேற்று நெல்லையில் காட்டுப்பகுதியில் மாயாண்டி பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து தனிப்படையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு போலீசாரை கண்ட மாயாண்டி தப்பி ஓடினார். அவரை பின்தொடர்ந்து போலீசார் சென்ற நிலையில், மாயாண்டி தடுமாறி கீழே விழுந்தார்.
உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதில் மாயாண்டிக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாயாண்டியின் கூட்டாளிகள் மேலும் 3 பேரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.