என் மலர்
உள்ளூர் செய்திகள்
அக்னி நட்சத்திரம்- நீர்நிலைகளில் குளித்து மகிழும் வாலிபர்கள்
- ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரோட்டில் கடுமையான வெயிலால் வீடுகளில் புழுக்கம் நிலவி வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் அளவு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் மாலை 6 மணிக்கு மேலும் வெயிலின் தாக்கம் இருந்து கொண்டே உள்ளது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக சுமார் 105 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. புழுக்கத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
மேலும் ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் மாவட்டத்தில் கடுமையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இது வரும் 29-ந் தேதி வரை நீடிக்கிறது. இதனால் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் வெயிலின் அளவு தினமும் உச்சத்தை தொட்டு 111 டிகிரி வரை பதிவாகி வருகிறது. இதனால் ஈரோட்டில் வெளியே செல்ல முடியாத நிலையில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் என்ன செய்வது என தெரியாமல் மக்கள் புலம்பி வருகிறார்கள்.
ஈரோட்டில் கடுமையான வெயிலால் வீடுகளில் புழுக்கம் நிலவி வருகிறது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் பொது மக்கள் வீடுகளில் இருக்க முடியாமலும், வெளியில் செல்ல முடியாமலும் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகிறார்கள். வெயிலின் தாக்கம் காரணமாக மதிய நேரங்களில் முக்கியமான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. தொடர்ந்து நாளுக்கு நாள் வெயில் அதிகதித்து வருவதால் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வெளியே செல்லும் பெண்கள் முகத்தில் துணியும், குடை பிடித்த படியும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் பழங்கள் விற்பனை கடைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் ரோட்டோரங்களில் சாத்துக்குடி, தர்பூசணி மற்றும் நீர்சத்து பழ வகைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பழ வகைகளை அதிகளவில் வாங்கி சாப்பிடுகிறார்கள். பெரும்பாலான பொதுமக்கள் இயற்கைபானங்களை அதிகளவில் பருகி வருகிறார்கள். குறிப்பாக இளநீர், நுங்கு மற்றும் பழ வகை சாறுகளை அதிகளவில் பருகி வருகிறார்கள். இதனால் இளநீர் மற்றும் நுங்கு கடைகள் பல பகுதிகளில் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டுவதால் பொதுமக்கள் பலர் நீர் நிலைகளை தேடி குளித்து வருகிறார்கள். குறிப்பாக வாலிபர்கள் மற்றும் சிறுவர்கள் நீச்சல் குளங்களுக்கு சென்று நீண்ட நேரம் குளித்து மகிழ்கிறார்கள். மேலும் பலர் குளம், குட்டைகளுக்கு சென்று குளித்து வெப்பத்தை தணித்து வருகிறார்கள்.
அக்னிவெயில் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம். அவர்களை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுரை கூறி பார்த்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதே போல் இன்று கொடிவேரி, காளிங்கராயன் அணைக்கட்டு மற்றும் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள் வந்து குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் இளைஞர்கள் வந்து நீண்ட நேரம் குளித்துக் கொண்டே இருந்தனர். கடும் வெப்பத்தால் சிறுவர்கள் பலர் தண்ணீரை விட்டு வெளியே வராமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குளித்து சூட்டை தனித்தனர்.