search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் தொகுப்பில் ரூ.1000 தரவில்லை- ஆத்திரத்தில்  கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்
    X

    பொங்கல் தொகுப்பில் ரூ.1000 தரவில்லை- ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்

    • அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு கட்டிடத்தையும் சோதனை செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தின் மையப்பகுதியான வண்ணார்பேட்டை கொக்கிரகுளம் பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது.

    இங்கு ஊரக வளர்ச்சி முகமை, வருவாய்த்துறை, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் துறை என 20-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் பாளை தாலுகா அலுவலகம், இ-சேவை மையம், தபால் நிலையம் உள்ளிட்டவையும் இயங்கி வருகிறது.

    இங்கு பல்வேறு பணிகளுக்காகவும் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு கருதி இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றி கொண்டு இருப்பார்கள். மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.

    இந்நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று அதிகாலை 1.20 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். அப்போது பேசிய நபர், நெல்லையில் இருந்து பேசுகிறேன். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.


    இந்த தகவல் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமனிக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவரது உத்தரவின்பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்கு விரைந்து சென்றனர்.

    வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து மெட்டல் டிடெக்டர் மூலமாக அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு கட்டிடத்தையும் சோதனை செய்தனர்.

    மேலும் போலீசாரும் மோப்பநாய் மூலமாக கட்டிடங்கள், அரசு வாகனங்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். கலெக்டர் அலுவலகம் முழுவதும் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் வேறு எதுவும் சிக்கவில்லை. இதனை தொடர்ந்து அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

    பின்னர் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் அழைப்பு வந்த செல்போன் எண்ணை போலீசார் செல்போன் சிக்னல் மூலமாக ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிக்னல் பேட்டை ஆசிரியர் காலனியை காட்டியது. உடனடியாக பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் அங்கு விரைந்தனர்.

    அங்குள்ள 3-வது தெருவில் விசாரணை நடத்தியபோது கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் செய்யது அப்துல் ரஹ்மான்(வயது 45) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து நடத்திய விசாரணையில், செய்யது அப்துல் ரஹ்மான் பேட்டை பகுதியில் கார் டிங்கரிங் மற்றும் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வருவரு தெரியவந்தது. இவருக்கு மனைவி , ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    சமீபத்தில் செய்யது அப்துல் ரஹ்மானின் மனைவி, தமிழக அரசின் திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1000 கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், பணம் வழங்கப்படவில்லை என்பதால் செய்யது அப்துல் ரஹ்மான் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே மகளிர் உரிமை தொகையும் கிடைக்காத நிலையில், பொங்கலுக்கு எதிர்பார்த்த ஆயிரம் ரூபாயும் தரவில்லையே என்று செய்யது அப்துல் ரஹ்மான் ஆத்திரம் அடைந்துள்ளார்.

    உடனே நேற்று மாலை பேட்டையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்திய அவர், இரவில் மதுபோதையின் உச்சத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து செய்யது அப்துல் ரகுமானை பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×