என் மலர்
உள்ளூர் செய்திகள்
நிதிநிலை சீரழிவே தி.மு.க.வின் சாதனை- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
- தமிழ்நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.
- தமிழக வரலாற்றிலேயே இதுபோன்ற ஆட்சியை பார்த்ததே இல்லை.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சி அமைக்கப்பட்டு 43 மாதங்கள் கடந்த நிலையில், தமிழ்நாட்டின் நிதி நிலைமை அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும், பொதுத்துறை நிறுவனங்களும் தொடர்ந்து பெரும் இழப்பை சந்தித்து வருவதாகவும் இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் தெரிவித்து இருக்கிறார். இது தான் தி.மு.க. அரசின் மூன்றரை ஆண்டு கால ஆட்சியின் சாதனை.
சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம், வாகன வரி, முத்திரைக் கட்டணம், பதிவுக் கட்டணம் என மாநில அரசின் வரம்புக்குள் வரும் அத்தனை வரிகளையும் உயர்த்தி ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்கள் மீது நிதிச் சுமையை சுமத்தியும், தமிழ்நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது, மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவை அதலபாதாளத்தில் சென்றிருக்கின்றன என்றால், இதற்குக் காரணம் திறமையற்ற ஆட்சி, செயல்படாத ஆட்சி, தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றுதான் பொருள். தமிழக வரலாற்றிலேயே இதுபோன்ற ஆட்சியை பார்த்ததே இல்லை என்று மக்கள் சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.
தி.மு.க ஆட்சி அகற்றப்பட்டு, அம்மா வகுத்துக் கொடுத்த ஆட்சி மீண்டும் மலரும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை அண்ணா தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.