என் மலர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி நகரின் பெருமைகளில் ஒன்றான பிடமனேரி ஏரி தூர்வாரி சீரமைக்கப்படுமா? -பொதுமக்கள் எதிர்பார்ப்பு
- கண்களிலிருந்து நீரை வரவைக்கும் நிலையில் பாழ்பட்டு கிடக்கிறது.
- கொசுக்களின் உற்பத்தி தலமாகவும் மாறிவிட்டது.
தருமபுரி,
தருமபுரி நகரின் மையப்பகுதியில் வரலாற்று நினைவிடங்களில் ஒன்றாக உள்ளது பிடமனேரி ஏரி. தமிழ் மூதாட்டி அவ்வையார் தனது கைகளாலேயே இந்த ஏரியின் கரைகளை மண் அள்ளி பூசி கட்டினார் என்கிறது முன்னோர்களின் வரலாற்று சுவடுகள்.
கடந்த 10 வருடங்குளுக்கு முன்பாக கூட தருமபுரி நகரின் குடிநீர் தேவையை போக்கும் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக விளங்கிய பிடமனேரி ஏரி தற்போது காண்போரின் கண்களிலிருந்து நீரை வரவைக்கும் நிலையில் பாழ்பட்டு கிடக்கிறது.
ஏரியை சுற்றிலும் குப்பைகள் கொட்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஏரியின் அளவு சுருங்கி வருகிறது. கட்டிட கழிவுகள், பழைய வீட்டு உபயோக பொருட்கள், குப்பைகூளங்கள் கொட்டப்பட்டு ஏரியின் அளவும் சுருங்கி வருகிறது.
நகராட்சி ஊழியர்களே சில நேரங்களில் இந்த ஏரியின் கரையோரம் குப்பைகளை போட்டு எரிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஏரியை சுற்றி பெருகிவிட்ட குடியிருப்புகள் காரணமாக கழிவு நீரும் ஏராளமாக ஏரியில் கலந்து வருகிறது. இதனால் தற்போது ஏரியில் உள்ள நீரின் நிறமே கருப்பாக மாறிவிட்டதுடன் அப்பகுதியை கடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றமும் வீசுகிறது.
மேலும் வியாதிகளை பரப்பும் கொசுக்களின் உற்பத்தி தலமாகவும் மாறிவிட்டது. கடந்த ஆண்டு நகராட்சி நிர்வாகம் மூலம் இந்த ஏரியை தூய்மைப்படுத்தும் விதமாக சில பணிகள் நடந்தன.ஆனால் அதற்குண்டான முழுமையான பயன் கிடைக்கவில்லை என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
இப்போது ஏரி தன் பழைய நிலையை அடைந்தால் கூட சுமார் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்க முடியும் என்று கூறும் பொதுமக்கள் பிடமனேரி ஏரியை தூர்வாரி சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.