என் மலர்
உள்ளூர் செய்திகள்

உரிக்காமலேயே கண்ணீரை வரவழைக்கும் வெங்காயம்

- விலைவீழ்ச்சி ஏற்பட்டு, விவசாயிகள் வேதனை அடைவது தொடர்கதையாகிவிட்டது.
- தங்களது வாழ்வாதாரத்தைகாப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு சீசன் காலங்களிலும் வெங்காய விளைச்சல் அதிகமாகி வருகிறது .இதன்காரணமாக விலைவீழ்ச்சி ஏற்பட்டு, விவசாயிகள் வேதனை அடைவது தொடர்கதையாகிவிட்டது.
விளைச்சல் குறைந்தால், விலை அதிகமாகி, வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. விளைச்சலுக்கு, நுகர்வுக்கும் இடையே சீரான தன்மை இல்லாததே இதற்கு காரணம்.
இம்முறை, வெங்காய விளைச்சல் ஓரளவுக்கு இருந்தாலும், விவசாயிகள் வேறு விதமாக பாதிக்கப்பட்டு, கடும் வேதனைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
அதாவது, பூஞ்சை நோய் காரணமாக, வெங்காயம் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது, விவசாயிகளை கடும் துரயத்தில் ஆழ்த்தியுள்ளது. தருமபுரி அதகபாடி பகுதி வேளான் வட்டாரத்தில் அதிக அளவில் சின்னவெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் நடவு செய்யப்பட்டுள்ளது.
முந்தைய அறுவடையில் வெங்காயத்தின் விலை கடுமையான வீழ்ச்சியினை சந்தித்த காரணத்தால், இந்தவருடம் வழக்கத்தைவிட குறைவான நிலப்பரப்பிலேயே வெங்காயம் நடவு செய்துள்ளனர்.
இவை, தற்போது அறுவடை செய்யப்படுகிறது. முந்தைய அறுவடையில் அதிக விளைச்சலால் விலை வீழ்ச்சியினை சந்தித்த சின்ன வெங்காயம் கேட்பாரற்று கிடந்த நிலையில், இந்த வருடம் நியாயமான விலை கிடைக்கும் என விவசாயிகள் கணித்திருந்தனர்.
தற்போது சின்ன வெங்காய மகசூல் பெரும் ஆபத்தான கட்டத்தை நோக்கி செல்கிறது. இந்த நோய் தாக்கம் காரணமாக, வெங்காயத்தின் இயல்பான வடிவம் மாறி, மிகுந்த எடையிழப்பு ஏற்படுகிறது. இதனால், போதிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு கிலோ வெங்காயம் தரத்திற்கு ஏற்ப 10 முதல் 15 ரூபாய் வரை மட்டுமே இடைத்தரகர்கள் வாங்கி செல்வதாகவும் பலலட்ச ரூபாய் செலவு செய்து முதலீடு வராததால் வெங்காயத்தை வெட்டாம லேயே கண்ணீரை வரவழைப்பதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே, அரசு நேரடியாக விவசாயிகளிடம் இருந்து சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்து அதற்கான ஒரு நிலையான விலையை நிர்ணயம் செய்து வழங்கவேண்டும். தோட்டக்கலை துறை அதிகாரிகள் உடனடியாக களஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், சின்னவெங்காயத்தையும், தங்களது வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.