என் மலர்
உள்ளூர் செய்திகள்
விதி முறைகளை மீறி ஆன்லைன் அபரதம்: லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு
- லாரி உரிமையாளர்களுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
- டிசம்பர் மாத இறுதியில் லாரி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம்.
சேலம்:
தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமாக லாரிகள் இயக்கப்படுகின்றன. இதில் 4 லட்சம் லாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், 1 லட்சம் லாரிகள் வட மாநிலங்களுக்கும் சென்று வருகின்றன.
டிரைவர்கள், கிளீனர்கள், பாரம் ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் 8 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இதனை நம்பி உள்ளனர்.
இந்தநிலையில் டீசல் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு, சுங்க சாவடி கட்டண உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் லாரி உரிமையாளர்களுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
மேலும் டிரைவர், கிளீனர் தட்டுப்பாட்டால் லாரிகளை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே போக்குவரத்து போலீசார் விதி முறைகளை மீறி விதிக்கும் ஆன்லைன் அபாராதத்தால் லாரி தொழில் மேலும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் கூறி உள்ளனர். இதனால் விரைவில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறுகையில், டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் லாரி தொழில் முடங்கி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான லாரிகளை இயக்க முடியாமல் சாலை யோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து லாரிகளும் ஆண்டுதோறும் எப்.சி. காட்டி தான் சாலையில் ஓட்டுகிறோம். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தை கூறி லாரிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கிறார்கள்.
மேலும் லோடு, ஏற்றி இறக்கும் போதும் லாரிகளுக்கு போலீசார் அபராதம் விதிக்கிறார்கள். இதுதவிர வணிக நிறுவனங்கள் முன்பு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லாரிகளுக்கு சில நேரங்களில் வாரத்திற்கு இரு முறை கூட ஒரே லாரிக்கு போக்குவரத்து போலீசார் ஏதாவது காரணம் கூறி ஆன்லைனில் அபராதம் விதித்து வருகிறார்கள். இது சென்னையில் தான் அதிக அளவில் நடக்கிறது.
இது குறித்து போலீஸ் டி.ஜி.பி. மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரிடமும் பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் லாரிகளில் உள்ள ஒளிரும் பட்டைகள் நல்லபடி இருந்தாலும் அடிக்கடி மாற்றும்படி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வலியுறுத்துகிறார்கள்.
புதிதாக டிரைவிங் லைசன்ஸ் எடுக்கும் போது அன்று மாலையே லைசன்ஸ் எடுப்பவரிடம் புதிய லைசன்ஸ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது லைசன்ஸ் எடுப்பவரின் ஆவணங்களில் உள்ள முகவரிக்கு தான் லைசன்ஸ் செல்கிறது . அதற்கு ஒரு வாரம் ஆகிறது. இதனால் காலவிரயம் ஆகிறது.
லாரிகளை ஒரு வாரம் இதனால் நிறுத்தி வைக்கும் நிலை உள்ளது. எனவே முன்பு போல லைசன்சை உடனடியாக அவர்களிடமே போக்குவரத்து அதிகாரிகள் வழங்க வேண்டும், இந்த கோரிக்கைகள் குறித்து பல முறை வலியுறுத்தியும் நிறைவேறவில்லை.
இதனால் ஒரு லாரிக்கு 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கூடுதல் செலவாகிறது. இதனால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை.
இனி வரும் காலங்களிலும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் டிசம்பர் மாத இறுதியில் லாரி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் அனைவரின் கருத்தையும் கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.