search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி, குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்மழையுடன் கடும் மேகமூட்டம்
    X

    ஊட்டி, குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்மழையுடன் கடும் மேகமூட்டம்

    • மலைப்பாதைகளில் காலை முதல் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.
    • தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இருப்பினும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் நீர்ப்பனி காணப்படுகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதன்படி சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    அந்த வகையில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து இன்று காலை முதல் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேக மூட்டத்துடன் மழை பெய்கிறது.

    இதனால் ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலை மற்றும் ஊட்டியில் இருந்து தொட்டபெட்டா செல்லும் மலைப்பாதைகளில் காலை முதல் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.

    இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் மலைப்பாதையில் செல்லும் சுற்றுலா வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலும் தங்களின் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்வதை பார்க்க முடிந்தது.

    ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் காலைமுதலே சாரல் மழை மற்றும் மேகமூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. இதனால் அவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்களின் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதற்கிடையே குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 நாட்களாக கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, எடப்பள்ளி, வண்டிச்சோலை, கொலக்கம்பை ஆகிய பகுதிகளில் காலை முதலே பனிமூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மேலும் கடும் குளிரும் நிலவிதால் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிர்கால ஆடைகள் அணிந்து வெளியிடங்களுக்கு சென்று வந்தனர்.

    அதிலும் குறிப்பாக குன்னூர் பகுதியில் குளிர் அதிகளவில் இருந்ததால் தொழிலாளர்கள் மாலை 4 மணிக்கே அந்த பகுதியில் தீமூட்டி உடலை கதகதப்பாக வைத்துக்கொண்டனர்.

    மேலும் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்வதால்மலை மாவட்டத்திலும் தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

    Next Story
    ×